search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் ஷாப்பிங் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி
    X

    பெண்களின் ஷாப்பிங் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி

    ஷாப்பிங் பிடிக்காத பெண்களை வலைபோட்டுத் தேடினாலும் சிக்குவது சந்தேகம்தான். இன்று ஷாப்பிங் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
    ஷாப்பிங் பிடிக்காத பெண்களை வலைபோட்டுத் தேடினாலும் சிக்குவது சந்தேகம்தான். அன்றைய டிரெண்டில் உள்ள பொருட்களை வாங்கிக் குவிப்பதில் அவர்களுக்கு இணை அவர்களே. குண்டூசி முதல் வைர நெக்லஸ் வரை எதையும் வாங்குவார்கள். சிக்கன சிகரமாக எந்த இடத்தில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்று தேடித்தேடி ஷாப்பிங் போனாலும், வேண்டாத பொருளை வாங்கிக் குவித்து பேங்க் பேலன்ஸை டான்ஸ் ஆடவைப்பார்கள்.

    * உங்க மாத பட்ஜெட்ல தேவையான செலவுகள், அத்தியாவசிய செலவுகளுக்கான தொகை போக, மிச்சத்தை எடுக்க முடியாதபடி சேமிப்பில் போட்டுவிடுங்கள். ஷாப்பிங் செய்ய சிறிய தொகையை மட்டுமே ஒதுக்குங்கள். மனம் பரபரத்தாலும் பணம் கையில் இருந்தால்தானே வாங்க முடியும்.

    * ஷாப்பிங் செல்லும் முன் என்ன வாங்கப்போகிறோம். அந்தச் சூழலில் அது மிகமிக அவசியமா என்று உங்களுக்குள் பலமுறை கேட்டு, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் சொல்லுங்கள். இதன் அடிப்படையில் வாங்க வேண்டிய பொருட்களுக்கு லிஸ்ட் போடலாம். அப்போதைய அவசர தேவைகளுக்கு மட்டும் முதலிடம் கொடுங்கள்.

    * நீங்கள் ரிலாக்ஸ்டாக உணரும் நேரத்தில், ஷாப்பிங் செல்லுங்கள். அவசரமாக ஷாப்பிங் முடிப்பது போல சூழல் இருந்தால், நிம்மதியாக ஒரு பொருளை யோசித்து தேர்வுசெய்ய முடியாது. அதற்கான நேரமும் சூழலும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஷாப்பிங் இனிக்கும்.

    * பலரும் ஷாப்பிங் செல்ல ஒரு குழுவாக படை எடுக்கிறோம். அவர்கள் நம் விருப்பத்துக்கு மாறான ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க நிர்பந்திக்கும்போது, நட்பின் சங்கடத்தால் தேவையற்ற பொருளை வாங்கிவிடுகிறோம். அதனால், உங்களை நன்கு அறிந்த நெருக்கமானவர்களுடன் மட்டும் ஷாப்பிங் செல்லுங்கள்.

    * நாம் வழக்கமாகச் செல்லும் கடைகளில் விற்பனை பிரதிநிதிகள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். விலை குறைவாக இருக்கிறது என்று அவர்கள் பரிந்துரைக்கிற பல பொருள்களும் லிஸ்டில் இடம்பிடிக்கும். குறைந்த விலை எனினும், தேவையற்ற ஒரு பொருள் உங்களுக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் பட்டியலிட்டதற்கு மேல் ஒரு பொருளையும் வாங்காதீர்கள்.



    * நீங்கள் லிஸ்ட் போட்ட பொருள்கள் உள்ள கடைக்கு மட்டும் செல்லுங்கள். பணம் மட்டும் அல்ல ஷாப்பிங் செல்லும்போது தேவையின்றி நேரம் வீணாவதைத் தடுப்பதும் டென்ஷனைக் குறைக்கும்.

    * ஷாப்பிங் திட்டத்தில் நேரத்தையும் கவனத்தில் எடுக்கவும். மதிய உணவை வெளியில் சாப்பிடுவது போல இருந்தால், ஷாப்பிங்கோடு ஹோட்டலுக்கும் சேர்த்துச் செலவழிக்க வேண்டி வரும். உணவை வீட்டிலேயே முடித்துவிட்டுச் சென்றால், ஹோட்டல் பில்லை கட் செய்யலாம்.

    * பில் கட்ட கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? கட்டணம் செலுத்தும்போது, இரண்டு முறை பணம் எடுக்கவும் வாய்ப்புள்ளது. பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்கள் உங்களது மொபைல் போனுக்கு வருகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

    * நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவராக இருந்தாலும், சிறந்த சலுகைகள் வரும் நேரமாகப் பார்த்து பொருளைத் தேர்வுசெய்யலாம். ஒரே குறிப்பிட்ட பொருளுக்கு வெவ்வேறு ஷாப்பிங் இணையதளங்களில் உள்ள விலைகளை ஒப்பிட்டு முடிவுசெய்யுங்கள்.

    * நேரம் கிடைக்கும்போது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தேவையான பொருள்களின் விவரங்கள் குறித்து பார்வையிடலாம்; ஒப்பிடலாம்; கருத்து கேட்கலாம். ஆனால், தேவை என்றால் மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருங்கள்.
    Next Story
    ×