search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் ஆயுர்வேதம்
    X

    நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் ஆயுர்வேதம்

    அவரவர் பிரதிநிதி உடல் கூறுக்கேற்ப வரும் கனவுகள் பற்றி கூட ஆயுர்வேதம் சொல்கிறது. நம் வாழ்க்கை முறையை நெரிபடுத்தி கொண்டால் நோயற்ற வாழ்க்கை அனைவருக்கும் சாத்தியமாகும்.
    பிரபஞ்சத்தை போலவே நமது உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது என்று பார்த்தோம்.

    நிலம் - உடலின் அமைப்பு
    நெருப்பு - உடலின் (நொதி), (சுரப்புகள்)
    காற்று - சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
    நீர் - உடலில் உள்ள எல்லா திரவங்களும் (ரத்தம், நிணம்)
    ஆகாயம் - உடலில் உள்ள வெற்றிடங்கள்

    உடலில் இந்த ஐந்து மூலகங்களும் சேர்ந்து 3 தோஷங்களாக உள்ளன. அவை வாதம் (காற்று), பித்தம் (நெருப்பு), கபம் (நீர்) என்பன ஆகும். இவை ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு விகிதத்தில் இருக்கின்றன.

    பெரும்பாலும் இந்த 3 தோஷங்களில் ஏதாவது 1 அல்லது 2 தோஷங்கள் அதிகமாக இருக்கும். (3 தோஷங்களும் மிகவும் அதிசயமாகஆகவே சரிசமவிகிதத்தில் இருக்கும்.) ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மையும் இந்த விகிதத்தை வைத்தே அமைகிறது. பிறப்பில் ஏற்படும் அமைப்பு இறப்புவரை தொடருகிறது. உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றம் காரணமாக இந்த தோஷங்களின் விகிதம் மாறும்.

    ஆரோக்கியமான உடல், மனம் மற்றும் ஆன்மாவுக்கான 3 தூண்களாக இந்த 3 தோஷங்களும் சொல்லப்படுகின்றன. இந்த 3 தோஷங்களும் சமநிலையில் இருந்து மாறாமல், சரிவிகிதத்தில் இருக்க ஆயுர்வேதம் வழிகாட்டுகிறது.

    நமது உடல் விந்தையான எந்திரம். தனக்கு தேவையான சத்துக்கள் இருக்கும் பொருளை (உணவை) சாப்பிட ஆசை கொள்ள வைக்கிறது. அதுபோலவே தனக்கு வந்த நோயை தீர்த்துக் கொள்ள அதுவே முயல்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதன் மொழியை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதே. ஆனால் இன்று உடல் சொல்ல முயற்சிக்கும் விஷயங்களை ஆழ்ந்து, கூர்ந்து கவனித்து, புரிந்து நடக்க நேரமில்லை.

    உதாரணமாக உணவு தேவைப்படும்போது பசி உணர்வு தோன்றுகிறது. உடனே உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால் கொட்டாவி வருகிறது. தலைவலி வருகிறது. இன்னும் சிலருக்கு வயிறு பிரட்டும். மயக்கம் வரும். இவையே உடலின் சங்கேத மொழிகள். பசிவந்தும், உணவிருந்தும் சாப்பிட நேரமிருக்காது இன்றைய சூழலில். (இதுவே நடைமுறை மாற்றம், வாழ்வியல் மாற்றம்)

    உடல் தன் தேவையை சொல்வதுபோல வெளியில் இருந்து ஏதேனும் ஒவ்வாத பொருட்கள் உள்ளே வரும்போது அதை தாக்க முற்படுகிறது. உடலின் வெப்பநிலை உயருகிறது. அதிகப்படியான கபத்தை உண்டாக்கி அதன் காரணமாக வெள்ளை அணுக்கள், தற்காப்பு அணியாக உருவாகின்றன. அவை புதிதாக நுழைந்த எதிரியுடன் சண்டையிட்டு சளியை உண்டாக்கி அதை வெளியே தள்ள முயற்சிக்கும்.

    இது முடியாவிட்டால் வயிற்று போக்கை உண்டாக்கி அதன்மூலம் வேண்டாத பொருட்களை வெளியே அனுப்பும். உடலின் இச்செயல்பாடுகள் நன்மை புரிவதற்காக என்பதை புரிந்து கொள்ளாமல், சளி, வயிற்றுபோக்கு ஆகியவற்றை அடக்க மருந்து சாப்பிடுகிறோம். அதற்கு பதிலாக உடல் தன் கடமையை செய்ய உதவும் வகையில் மருந்து எடுக்கலாம். நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான நடைமுறைகளாக ஆயுர்வேதம் சொல்வதை பற்றி காண்போம்.

    ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறைகள்

    தினசரி காலையில் கண்விழித்து எழுவது, தனிமனித சுகாதாரம், நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் பற்றி கூறுகிறது. பிரம்மமுகூர்த்தம்: நமது வாழ்வின் 'ஒருநாள்' என்பது கண் விழிப்பதில் தொடங்குகிறது. தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் எழ வேண்டும். இந்த நேரம் பிரம்ம முகூர்த்தம், சரஸ்வதி யாமம் எனப்படும்.

    இந்த வேளையில் பிரபஞ்சமே அமைதியாக இருக்கிறது. காற்று தூய்மை ஆக இருக்கிறது. இயற்கையோடு இணைந்து போக இதுவே நல்ல தருணம். பிரார்த்தனை, தியானம், இவற்றில் ஈடுபட்டால் மிகுந்த பலன்களை பெறலாம். நமது முயற்சிகள் எதுவும் இல்லாமல் தானாகவே நேர்மறையான எண்ணங்களும், அதிர்வுகளும், உடலிலும், மனதிலும், ஆன்மாவிலும் எழுகின்றன. பிரம்ம முகூர்த்த வேளையில் காற்றில் ஓசோன் அதிகம் இருப்பதாக இன்று அறிவியலார் கூறுவர்.

    காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை கழிப்பது மிகவும் அவசியம். நமது உடல் தேவையற்ற பொருட்களை மலமாகவும், சிறுநீராகவும வெளியேற்றுகிறது. ஆகவே இது முறையாக நடக்க வேண்டும். அதன்பின்பே பிரார்த்தனை, தியானம் போன்வற்றில் ஈடுபட வேண்டும்.

    பிரார்த்தனை என்பது மிகவும் சக்திவாய்ந்தது. எதையும் சாதிக்கலாம். எல்லாவற்றையும் சாதிக்கலாம். மகாத்மா காந்தி பிரார்த்தனையை வலியுறுத்தி பேசுவார்.
    தியானம் என்பது உயர்ந்தநிலை. தியானம் மூலம் ஒருவன் தன்னை உணரலாம். இறையை உணரலாம். பேரின்பத்தில் திளைக்கலாம். இன்று மனதை ஒருமுகப்படுத்த வேண்டி தொழிற்கூடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கூட தியானத்தை கற்றுத் தருகின்றன.

    தந்ததவனம் (பல் துலக்குவது)

    பல் துலக்குவது மட்டுமின்றி முழு வாய்க்குமான பயிற்சி. (கஷாயரசம்), (காரம்), (கசப்பு) மிகுந்த பல் பவுடர்களை உபயோகிக்க வேண்டும். பல் ஈறு முழுவதும், நாக்கு, மேல் அண்ணம் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கொப்பளிக்க வேண்டும். இதனால் ருசியை உணரும் நரம்புகள் தூண்டப்பட்டு, பசி தூண்டப்படுகிறது. (எடுத்துக்காட்டு: தசனகாந்தி சூரணம்)

    அஞ்சனம்: கண்களுக்கு மை போடுவது. கண்ணீர் சுரப்பி மற்றும் கண்களுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. (இளநீர்க் குழம்பு)
    நஸ்யம்: நாசித்துவாரங்களில் மருந்தூட்டப்பட்ட எண்ணெய், பால், மூலிகைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றுவது. இது சுவாசத்தை சீராக்கும். கபத்தை கரைக்கும். கழுத்துக்கு மேலே இருக்கும் எல்லா உறுப்புகளையும் சுத்தம் செய்யும். (அனுதைலம்)

    கண்டூஷம், கவளம்: வாயில் பால், எண்ணை, கஷாயம், வெதுவெதுப்பான நீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி கொப்பளிப்பது. இது வாய், பற்கள், நாக்கு, பலஈறுகள் ஆகியவற்றை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும். (அரிமேதஸ் தைலம்)

    தூபம்: மருந்தூட்டபத்திகளிலிருந்து புகையை உள்ளிருப்பது, இது தலை பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளையும் சுத்தமாக்கும்.

    தாம்பூலம்: வெற்றிலை, பாக்கை மென்று சாப்பிடுதல், சீரணம் அதிகரிக்கும்.

    அபயங்கம்: உடல் முழுவதும் எண்ணெய் தேய்ப்பது, தலையில் உச்சியிலும் காதுகளுக்கு பின்பும், உள்ளங்கைகளிலும், பாதங்களிலும் கவனம் செலுத்தி தேய்க்க வேண்டும். இதனால் முதுமை அடைவது தள்ளி போடப்படும். சோர்வு நீங்கும். உடலுக்கு போஷாக்கு கிடைக்கும். உடல் வளைந்து கொடுத்து இலகுவாகும். தூக்கம் நன்கு வரும். தோல் வனப்புமிகும். பார்வை சீராகும். இதனை உணவுக்கு பின்போ, நண்பகலிலோ, இரவிலோ செய்யக்கூடாது. சளி, காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாது.

    வியாயாமா: (உடற்பயிற்சி) (குறிப்பாக யோகா)

    பருவகால மாற்றங்களுக்கேற்ப செய்ய வேண்டும். வெயில் காலங்களில் குறைவாகவும், மற்ற காலங்களில் முன்நெற்றியிலும், மூக்கிற்கு கீழேயும், வியர்க்கும் வரையும் செய்ய வேண்டும். நம் சக்தியில் பாதியளவு வரை செய்ய வேண்டும். இதனால் வேலைத்திறன் அதிகரிக்கும். ஜீரணம் தூண்டப்படும். தேவையற்ற கொழுப்பை கரைக்கும். உடல்தோற்றம் பொலிவுபெறும்.

    குளியல்: நல்ல நீரில் குளிப்பது. இதனால் உடல் தூய்மை பெறும். மனம் உற்சாகம் அடையும். உணவு உண்ட பின்போ, நண்பகலிலோ, நள்ளிரவிலோ (தகுந்த காரணமின்றி) குளிக்கக் கூடாது.

    உணவு: சரியான நேரத்தில், சத்தான, இயற்கையான, முறைப்படி சமைத்த உணவை உண்ண வேண்டும். முதலில் உண்ட உணவு ஜீரணம் ஆனபின்பே, அடுத்த வேளை உண்ண வேண்டும். காலந்தாழ்த்தி உண்ணக்கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவையே உண்ண வேண்டும். சரிவிகித உணவையே உண்ண வேண்டும். இரவில் எளிதில் ஜீரணம் ஆக முடியாத உணவை உண்ணக்கூடாது. இவை பற்றி பின்பு விரிவாக காண்போம்.

    நல்ல பழக்கங்கள் (நெரிபடுத்தப்பட்ட செயல்பாடுகள்) (இதில் உடல், மனம் இரண்டும் அடங்கும்)

    இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்தவோ, வலிந்து அவசரப்படுத்தவோ கூடாது. தாகம், தும்மல், சிறுநீர், மலம், வாயுபிரிவது ஆகியனவே அவை.

    உண்மை வழி நடத்தல்: இது நிரந்தர மகிழ்ச்சி தரும். நண்பர், நல்லவர், முதியோரிடம் அன்பாக இருத்தல். அவர்களுக்கு உதவி செய்தல்.

    எறும்பு முதலான உயிரினங்களையும் உயிராக மதிக்க வேண்டும். பசு, அந்தணர், முதியோர், வைத்தியர், விருந்தினர், தெய்வம் ஆகியோரை வணங்க வேண்டும்.பிச்சை மறுக்கக்கூடாது. இன்பத்திலும், துன்பத்திலும் ஒரே மனநிலையுடன் இருக்க வேண்டும்.

    ஐம்புலன்களையும் (கண், காது, செவி, தோல், வாய்) அதிகம் உபயோகிப்பதும் தவறு. பயன்படுத்தாமல் விடுவதும் தவறு.சரியான நேரத்தில் குறைவாக பேச வேண்டும். உண்மையான, இனிமையான நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். தும்மும் போதும், சிரிக்கும்போதும், கொட்டாவி விடும்போதும் வாயை மூடி கொள்ள வேண்டும்.

    தனியாக இருக்கக்கூடாது. சூரியனை வெறித்து பார்க்ககூடாது. மிகச்சிறிய, பளபளப்பான, காணத்தகாத, அசுத்தமான பொருட்களை தொடர்ந்து பார்க்கக்கூடாது. நேரடியான காற்று, சூரிய ஒளி, தூசு, பனி, சுழற்காற்று ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.எதிரிகள் தரும் உணவு, பலி, திதி ஆகியவற்றில் தரப்படும் உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.சந்தியா காலத்தில் தூங்குவது கூடாது. நகம், முடி, மீசை முதலியவற்றை ஒழுங்காக வெட்டி பராமரிக்க வேண்டும்.இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்களும் நமது ஆரோக்கிய வாழ்விற்கு தேவை என்று ஆயுர்தேவம் போதிக்கிறது.

    தூக்கம்

    ஒருநாளின் துவக்கம் உறக்கம் கலைந்து கண் விழிப்பது. அதுபோல ஒருநாளின் முடிவு உறங்க செல்வது. உறக்கம் ஆரோக்கிய வாழ்வுக்கு மிக முக்கிய தூண்களில் ஒன்று.குறித்த நேரத்தில் தூங்கிவிட வேண்டும். அதிகம் கண் விழித்தால் வாதம் கூடும். (தூக்கம் கெட்டால்). சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. எளிதில் சீரணமாகும் உணவையே சாப்பிடவேண்டும்.

    தூங்குவதற்கு 1 மணி, 1 1.2 மணிநேரம் முன்பு சாப்பிட்டிருக்க வேண்டும். தூங்குமுன் வாய் கொப்பளித்து, கால்களை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். தூங்குமுன் பிரார்த்தனை, தியானம் மூலம் மனதை சமநிலைக்கு கொண்டு வரவேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கூடாது. படுக்கை மிகவும் கடினமாகவோ, மிகவும் மென்மையாகவே இருக்கக்கூடாது. முதுகுத்தண்டிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    கட்டில் என்ன மரத்தில் இருக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் எந்த திசையில் தலைவைக்க வேண்டும். அவரவர் பிரதிநிதி உடல் கூறுக்கேற்ப வரும் கனவுகள் பற்றி கூட ஆயுர்வேதம் சொல்கிறது. (எடுத்துக்காட்டு: வாதம் அதிகம் இருந்தால் பறப்பது போல் கனவு வரும்)இவ்வாறு நம் வாழ்க்கை முறையை நெரிபடுத்தி கொண்டால் நோயற்ற வாழ்க்கை அனைவருக்கும் சாத்தியமாகும். இதுவே நம் முன்னோர்கள் குடும்ப பழக்கங்கள் என்ற பெயரில் செய்து வந்தனர். அதில் மறைந்திருந்த அறிவியல் உண்மை அரிய திறமை இல்லாத நாம் அவைகளை மூடநம்பிக்கை என ஒதுக்கி பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுள்ளோம்.

    டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-4322888, 2367200)
    Next Story
    ×