search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் 4-வது சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். 

    ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு சோமவாரத்தை (திங்கட்கிழமை) முன்னிட்டு தாயுமானசுவாமிக்கு 108 சங்குகளை மாணிக்க விநாயகர் சன்னதியில் பூஜைகள் செய்து, அபிஷேகம் நடைபெற்றது.
    இந்நிலையில் நேற்று கார்த்திகை மாதம் 4-வது சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. 

    இதையொட்டி நேற்று மாலை 4 மணியளவில் கோவிலில் தாயுமான சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக சன்னதி முன்பு 1,008 சங்குகளில் தீர்த்தம் வைக்கப்பட்டது. பின்னர் அதற்கு சந்தனம், குங்குமம், பூக்கள் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து 1,008 சங்குகளில் இருந்த தீர்த்தத்தை தாயுமான சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் மவுனமடம் கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவா என்று கோஷங்கள் எழுப்பி தாயுமான சுவாமியை வழிபட்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். இதேபோல நூற்றுக்கால் மண்டபம் எதிரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் சகஸ்வர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சன்னதியை சுற்றி தீபங்களை ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×