search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை காண தமிழ்நாடு, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் உற்சவம் தொடங்குகிறது. இன்று இரவு துர்க்கையம்மன் உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு துர்க்கையம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை முடிந்த பின்னர் அம்மன் காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.

    வருகிற 23-ந் தேதி காலை 4 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து அன்று காலையிலும், இரவிலும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் வெவ்வேறு வாகனங்களில் நடக்கிறது.

    3-ம் நாள் விழாவன்று 1,008 சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 2-ந் தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×