search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்த சஷ்டி 4-வது நாள்: வேண்டுதல்களை நிறைவேற்றும் முருகனின் ஆறுமுகங்கள்
    X

    கந்த சஷ்டி 4-வது நாள்: வேண்டுதல்களை நிறைவேற்றும் முருகனின் ஆறுமுகங்கள்

    கந்தசஷ்டி இன்று 4-ம் நாள். வேண்டுதல்களை நிறைவேற்றும் முருகபெருமானின் ஆறுமுகங்கங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மும்மூர்த்திகளின் திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துக்களின் ஒன்றான உருவமே முருகா எனும் பெயராகும். காக்கும் கடவுளாகிய முகுந்தன், அழிக்கும் சம்ஹார மூர்த்தியாகிய ருத்ரர், படைக்கும் கடவுளாகிய கமலோற்பவன். இவர்களின் முதல் எழுத்துக்கள் ஒன்றாகி முருகா என்ற பெயரானது.

    முருகனுக்கு ஆறு முகங்கள் உண்டு. இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, சூரியன் தனது கதிர்களை விரித்து ஒளியை தருகிறது. அதேபோன்று முருகனது ஒரு முகம், நமது அஞ்ஞானத்தை, அறியாமையை போக்கும் முகமாகும். முருகனை வணங்குகிற பக்தர்களுக்கு இனிய தோற்றத்தையும், கருணையையும், வேண்டும் வரங்களையும் வாரி வழங்குகிறது வேலவனின் இரண்டாவது முகம்.

    வேத மந்திரங்களையும், பூஜை முறைகளையும் வழுவாது, வேள்விகளை காப்பது கந்தனின் மூன்றாவது முகம். நம்மால் உணர முடியாத ஐயப்பாடுகளை உணர்த்தி, அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி, அருள் புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது முகம். அன்புடன் வரும் அடியார்களுக்கும், அந்தணர்களின் யாகத்தை காக்க தீயசக்திகளை விரட்டுவது ஐயனின் ஐந்தாவது முகம்.

    தெய்வானை, வள்ளியம்மை எனும் கிரியா சக்தி, இச்சா சக்தியர்களை கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் முருகனின் ஆறாவது திருமுகம். ஆக முருக பெருமானின் அருளை பெற அவனது ஆறு திருமுகத்தையும் நாம் உற்று நோக்கி வணங்கினால் நமது அறியாமை நீங்கி, வேண்டுதல்கள் நிறைவேறும்.



    மேலும் ஆன்மிக வழிபாட்டிலே ஆர்வம் ஏற்பட்டு, நமக்கு ஞானத்தை வழங்கி தீவினைகள் நீங்கி, இல்லறம் சிறந்தோங்கி நாம் மகிழ்வுடன் வாழ்வோம் என்பதை ஆறு திருமுகங்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு ஆறு திருமுகங்களை பெற்ற கந்த பெருமான் பன்னிரெண்டு திருக்கரங்களோடு நீல மயில் மீது விரும்பி எழுந்தருளி நம்மை காக்கின்றார்.

    மயில் ஓங்காரத்தை குறிக்கும். ஓங்காரமே பிரம்மம். ஓம் என்ற சப்தத்தில் மற்ற எல்லா ஓசைகளும் அடங்கி விடும். அகர, உகர, மகர ஒலிகள் கூடியது தான் ஓம்காரம். அகார சப்தம் மற்றும் அனைத்து சப்தங்களையும் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. சரவண பவா என்ற மந்திரத்தை மனதிலே நினைத்து, குகாய நம ஓம் என்று ஜபித்தால் முருகன் நமக்குள் ஓடோடி வந்து அருள் புரிவான்.

    நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. இந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு முருக பெருமான் எழுந்தருளியுள்ள ஆறு திருத்தலங்கள் ஆறு படை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

    திருப்பரங்குன்றம்- மூலாதாரம், திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், பழனி- மணிபூரகம், சுவாமிமலை- அநாகதம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்சோலை- ஆக்ஞை. நமது உடலிலே உள்ள ஆறு முக்கிய ஆதாரங்களை நினைத்து, அதிலே அறுபடை வீடு கொண்ட முருகனை நிலை நிறுத்தி மன ஒருமையுடன் வழிபட்டால் நமது உடலும், உள்ளமும் தூய்மை அடையும். இறைவனது சிந்தனை மேலோங்கும். தீவினைகள் ஓடி விடும்.



    பண்டைய காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று சேர்ந்து யாகம் ஒன்று வளர்த்தனர். யாகத்தின் பலனை, புண்ணியத்தை ஒரு தாம்பூலத்திலே கொண்டு வந்து யாருக்கு கொடுத்து முதல் மரியாதை செய்யலாம் என எண்ணிக் கொண்டிருந்த போது, சங்கத்தமிழ் மூன்றும் பெற்ற ஔவையாருக்கு கொடுக்கலாம் என்று வந்தனர். ஆனால் அதற்கு ஔவையாரோ, இதைப் பெற நான் தகுதி உடையவள் இல்லை.

    இனிய மழையை பொழியும் இந்திரனுக்கு கொடுங்கள் என்றார். அதற்கு இந்திரனும், பொதிகை மலையில் தமிழ் வளர்க்கும் அகத்தியரிடம் கொடுங்கள் என்று கூறினார். அகத்தியரோ, ஆயகலைகள் அறுபத்தை நான்கினையும் தன்னுள்ளே வைத்துள்ள சரஸ்வதியிடம் கொடுங்கள் என்றார். சரஸ்வதியோ, ஞான சொரூபியாகவும், ஞானாம்பிகையுமாகிய உமா தேவியிடம் கொடுங்கள் என்றார்.

    உமா தேவியரோ, எனது கணவருக்கு ஞான குருவாக உபதேசித்தவன், ஞான மூர்த்தி. தலைமை தலைச் சங்கத்தில் தலைமையானவன். ஆயிரம் மறைகளாலும், ஆகமங்களாலும் சூழப்பட்டவன், சகலகலா ஆசிரியன், சர்வபூரணன் என் மைந்தன் முருகனிடம் அந்த தாம்பூலத்தை கொடுங்கள். எல்லோரையும் விட அவனே அதை பெற தகுதியானவன் என்று உமா தேவியார் கூற முனிவர்கள் அந்த யாகத்தின் பலனை முருக பெருமானிடம் வழங்கினார்கள்.

    தகவல்: நெல்லை புலவர் மா.கந்தகுமார்.

    நாளை, முருக பெருமானின் வேலும், மயிலும் நமக்கு உணர்த்தும் உண்மைகளை காண்போம்.
    Next Story
    ×