search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்த சஷ்டி 3-வது நாள்: அருணகிரிநாதர் நாவில் வேலால் ‘ஓம்’ என்று எழுதிய முருகன்
    X

    கந்த சஷ்டி 3-வது நாள்: அருணகிரிநாதர் நாவில் வேலால் ‘ஓம்’ என்று எழுதிய முருகன்

    கந்தசஷ்டி இன்று 3-ம் நாள். முருகபெருமான் அருணகிரிநாதர் நாவில் வேலால் ‘ஓம்’ என்று எழுதிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகபெருமானின் பெருமைகளை பாடிய புலவர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலர் முருகனின் அருள் பெற்று பாடிய பாடல்கள் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது. அவ்வாறு முருகன் அருள் பெற்ற அருளாளர்களையும், அவர்களது பாடல்களையும் இன்று நாம் காண்போம்.

    அருணகிரியார், இவர் இளமையிலே தேவாரம், திருமந்திரம், திருக்குறள் போன்ற அனைத்து நூல்களையும் கற்று தேர்ந்தவர். காம சாஸ்திரமும் கற்றவர். சிறிது காலம் தெய்வ நம்பிக்கை இல்லாமல் திருநீறு பூசாமல் மாமிசம், மதுபானம் சுவைத்து விலை மாதர்களுடன் தொடர்பு கொண்டு தன் வீட்டில் உள்ள செல்வங்களை இழந்தார். சிற்றின்பத்தில் மூழ்கி கொடிய நோய்க்கும் ஆளாகிய அவர், இனி தனக்கு மரணம் தான் விடுதலை என்று எண்ணி திருவண்ணாமலை கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து கோபுரத்தில் ஏறினார்.

    ஏறும் போது அவருக்கு இறைவனது சிந்தனை மேலோங்கியது. கீழே குதித்தார். என்ன ஆச்சரியம். கீழே ஒரு பெரியவர் குரு வடிவாக வந்து அருணகிரியாரை இரு கைகளால் தாங்கி பிடித்து கீழே விட்டார். அந்த பெரியவரிடம் அருணகிரியார், அய்யா என்னை ஏன் காப்பாற்றினீர்கள். என்னுடைய பாவ மூட்டையை கரைக்க முடியாது. அதனால் மரணத்தை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றார். அதற்கு அந்த பெரியவர், நீ கந்தனை (முருகன்) வணங்கி தமிழ் பாடல் பாட வேண்டும்.



    அதுவரை முருகனது சிந்தனையோடு இக்கோவிலின் எல்லையில் சும்மா இரு என்று அந்த பெரியவர் கூறினார். அதன்படி அருணகிரியாரும் அந்த கோவிலிலே பல நாட்கள் தியானம் செய்தார். ஒருநாள் அருணகிரியார் முன்பு முருக பெருமான் தோன்றினார். தன்னுடைய திருவடி தரிசனம் தந்து காட்சி கொடுத்தார். அருணகிரியார் நாவில் முருக பெருமான், ஓம் எனும் மந்திரத்தை வேலால் எழுதி அருணகிரிநாதர் என்று திருநாமம் சூட்டி அருள் செய்தார்.

    மேலும் முருக பெருமான், “முத்தை தரு” என்ற பாடல் அடியை எடுத்து கொடுத்து பாடுக என்றார். அதன்பிறகு முருகன் அருளால் பல்வேறு தலங்களுக்கு சென்று திருப்புகழ் என்ற 16 ஆயிரம் பாடல்களை அருணகிரிநாதர் இயற்றி பாடியதாக சொல்லப்படுகிறது. நமக்கு கிடைத்ததோ 1,400 பாடல்கள்தான். திருப்புகழ் பாடல் முழுவதிலும் முருகனது பெருமைகளை பக்தி ரசம் சொட்ட சொட்ட பாடியுள்ளார் அருணகிரி நாதர்.

    தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீரவில்லை. வாழ்க்கையே வெறுத்து திருச்செந்தூர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு செந்தூர் கடற்கரைக்கு வந்தார். அப்போது கந்தசஷ்டி விழா தொடங்கும் நாள். தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள் சஷ்டி விழாவில் 6 நாட்கள் விரதம் இருந்து 6-வது நாள் தன் உயிரை போக்கி கொள்ளலாம் என்று எண்ணி முதல் நாள் விரதம் தொடங்கினார்.

    கவிபாடும் திறமை பெற்று இருந்த தேவராய சுவாமிகள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாட முடிவெடுத்தார். தினம் ஒன்றாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டுக்கு உரிய கவசங்களை பாட தொடங்கினார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் 6-வது நாள் கவசம் பாடி முடித்ததும் வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது. கந்தசஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், துன்பத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுவும் செந்தூர் கந்தசஷ்டி கவசம் இன்று உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களால் பாடப்பட்டு வருகிறது.



    காஞ்சீபுரத்தில் குமரக்கோட்டம் என்ற முருகபெருமானின் ஆலயத்தில் காளத்தியப்ப சிவாச்சாரியார் பூஜை செய்து வந்தார். அவருடைய மகன் கச்சியப்பர். சிறு வயதிலேயே அனைத்து பக்தி இலக்கியங்களையும், காவியங்களையும், புராணங்களையும், வேதங்களையும் கற்றுத் தேர்ந்தார். சமஸ்கிருத மொழியில் உள்ள புராணங்களையும், ஜோதிடக்கலையையும் சிறப்பாக கற்றவர்.

    தன் தந்தை வழியிலேயே முருக பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு பூஜை செய்து வந்தார். ஒரு நாள் முருக பெருமான், கச்சியப்பர் கனவிலே தோன்றினார். “வடமொழியிலே ஒரு லட்சம் சுலோகங்களை கொண்ட ஸ்கந்த புராணத்தை நீவிர் தமிழில் பாடுவாயாக“ என்று கூறி திகடச் சக்கரம் என்ற வார்த்தையையும் அடி எடுத்துக் கொடுத்தார் முருக பெருமான். கச்சியப்ப சிவாச்சாரியாரும் அந்த வார்த்தையை கொண்டு தினம் 100 பாடல்களாக எழுதி, அதனை முருக பெருமான் காலடியில் இரவு வைத்து விட்டு செல்வார்.

    மறுநாள் கோவில் நடை திறந்ததும் அதனை பார்த்தால் அந்த பாடல்களில் ஒரு சில திருத்தங்கள் இருந்தன. முருக பெருமானே அவருடைய பாடல்களை திருத்தம் செய்தார். அவ்வாறு 10 ஆயிரத்து 346 பாடல்களை எழுதி முடித்து அப்பாடல்கள் அரசனது அவையிலே அரங்கேற்றம் செய்யப்பட்ட போது, சோழ நாட்டு புலவர் ஒருவர் வடிவத்தில் வந்த முருகபெருமான் மற்ற புலவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.

    ஆக முருக பெருமானே தன் வரலாற்றை கச்சியப்பர் சிவாச்சாரியார் மூலம் எழுத வைத்துள்ளார். முருகனின் அவதாரம் முதல் சூரபதுமனை வெற்றி கொண்டு தெய்வானையை திருமணம் செய்யும் வரை உள்ள வரலாற்றை ஆறு காண்டங்களாக பிரித்து பல்வேறு அதிகாரங்களாக எழுதியுள்ளார்.

    தகவல்: நெல்லை புலவர் மா.கந்தகுமார்.
    Next Story
    ×