search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது
    X

    திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாகாப்புக் கட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்குகிறது. விழாவினையொட்டி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான், வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியாருக்கும் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதனையடுத்து காலை 9 மணிக்கு கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர்.

    காப்புக் கட்டிய பக்தர்கள் தினமும் காலை, மாலை சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர். விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.

    தினமும் தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல் வாங்கும் நிகழ்ச்சி வரும் 24-ந் தேதியும், 25-ந் தேதி சூரசம்ஹாரமும் நடைபெறும். விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக 26-ந்தேதி காலையில் தேரோட்டமும், மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். அன்றைய தினம் மாலை மூலவர் முருகன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும் கோவி லுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.கோவில் சார்பில் பக்தர்கள் தங்க வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×