search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்
    X

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்

    புதுவை வீராம்பட்டினத்தில் பிரசித்திபெற்ற செங்கழுநீரம்மன் கோவில் விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புதுவை வீராம்பட்டினத்தில் பிரசித்திபெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேரோட்டம் கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். விழாவில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, நமச்சிவாயம், துணை சபா நாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், துணை கலெக்டர் (வடக்கு) தில்லைவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தேரோட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது. 4 மாடவீதிகள் வழியாக சென்று காலை 10 மணியளவில் தேர் நிலையம் வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.



    தேரோட்டத்தையொட்டி புதுவையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. புதுச்சேரியில் இருந்து வீராம்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றி விடப்பட்டது.

    அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடவடிக்கைகள் கண்காணிக் கப்பட்டன. கடற்கரை பகுதிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றதால் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி சாதனங்களும் செய்யப்பட்டு இருந்தது. தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    புதுவையில் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் வீராம்பட்டினம் தேர் திருவிழாவில் கவர்னர் கிரண்பெடி தனியாக வடம் பிடித்து இழுத்தார். சற்று தூரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வடம் பிடித்தனர். பின்னர் கவர்னரும், முதல்-அமைச்சரும் தனித்தனியாக அம்மனை தரிசித்தனர். விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
    Next Story
    ×