search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆவணி மாத வழிபாட்டையொட்டி நாகராஜா கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    ஆவணி மாத வழிபாட்டையொட்டி நாகராஜா கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    ஆவணி மாத சிறப்பு வழிபாட்டையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் வசதிக்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. அதாவது கோவிலில் மூலஸ்தானத்தில் உள்ள புற்று மண் 6 மாத காலம் கருப்பு நிறத்திலும், 6 மாதம் வெள்ளை நிறமாகவும் இருக்கும். நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதிலும் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாகர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்களாக கருதப்படுகிறது.

    அப்போது நாகதோஷம், ராகு-கேது தோஷம், திருமணத்தடை, மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகிய தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் ஆடி மாதம் முடிவடைந்து ஆவணி மாதம் இன்று (வியாழக்கிழமை) பிறந்ததையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுபணி கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவில் தெப்பகுளத்தில் பக்தர்கள் நீராட வசதியாக ரூ.2 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு உள்ளது.

    பரிகார பூஜைகள் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பரிகார பூஜை செய்பவர்களுக்கு பிரசாதமாக பால்பாயசம் சில்வர் பாத்திரத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும், தேங்காய், பழம், அர்ச்சனை பிரசாதம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலில் வாடாமல் இருப்பதற்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் போடப்பட்டு வருகிறது.

    மேலும், பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிப்பதற்காக கோவிலை சுற்றிலும் 28 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. கோவிலின் மூலஸ்தானத்தின் மேல் வேயப்பட்டு இருந்த பழைய ஓலைகள் மாற்றப்பட்டு புதிய ஓலைகள் வேயப்பட்டு வருகிறது. வெளியில் இருந்து வரும் வாகனங்கள் கோவிலுக்குள் வரவும், கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த முன்னேற்பாடு பணிகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி நேற்று ஆய்வு செய்தார். பணிகளை துரிதப்படுத்தும்படி கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது கோவில் மேலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×