search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜை நடந்த போது எடுத்த படம்.
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜை நடந்த போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை

    கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் குமரி மாவட்ட கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை நேற்று காலை நடந்தது.

    கன்னியாகுமரி மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகராஜா கோவில் உள்பட பல கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை இந்த பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டு- கட்டாக கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்னர், அந்த நெற்கதிர்கள் அங்கு இருந்து மேள-தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு அந்த நெற்கதிர்களை பகவதி அம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது.


    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நெற்கதிர்களை பிரசாதமாக வழங்கிய காட்சி.

    இதைதொடர்ந்து அந்த நெற்கதிர்களை மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, ராதாகிருஷ்ணன் போற்றி, விட்டல் போற்றி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் இல்லத்தில் செல்வசெழிப்பு ஏற்படும் என்பதும், விளைநிலங்களில் அந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம். இதனால் பக்தர்கள் போட்டி போட்டு நெற்கதிர்களை வாங்கி சென்றனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று காலை நெற்கதிர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், அம்மன் முன் நெற்கதிர்கள் படைத்து பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    பின்னர் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதுபோல், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிறைபுத்தரிசி பூஜை நடந்தது.
    Next Story
    ×