search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது
    X

    நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது

    நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 7-ந்தேதி நடைபெறுகிறது.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழா வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 7.30 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா செல்கின்றனர். இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்கின்றனர். மேலும் சுவாமி சன்னதி வளாகத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கில் தினமும் மாலையில் பக்தி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.



    வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா செல்கிறார். அன்று இரவு 12 மணிக்கு நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலாவும், இரவு சுவாமி தங்க கைசால பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் தேர் கடாட்ச வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×