search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவில் வெள்ளை கோபுரத்தின் கீழ் பகுதி சீரமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஸ்ரீரங்கம் கோவில் வெள்ளை கோபுரத்தின் கீழ் பகுதி சீரமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வெள்ளை கோபுரம் சீரமைப்பு

    108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வெள்ளை கோபுரத்தின் கீழ் பகுதியை மூடியிருந்த மணல் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
    108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு பகுதியில் ஆசியாவிலேயே உயரமான 13 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

    இது தவிர வடக்கு கோபுரம், கிழக்கு கோபுரம், ரெங்கா, ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், சன்னதி கோபுரங்கள் உள்பட கோவில் வளாகத்தில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரம் வெள்ளை கோபுரம் என அழைக்கப்படுகிறது.

    இந்த கோபுரமானது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் அமைந்து உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசின் சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை தொடங்கப்பட்ட போது நெல் மற்றும் அரிசி போன்ற தானியங்கள் ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் சேமித்து வைக்கப்பட்டு கிட்டங்கி போல் பயன்படுத்தப்பட்டு வந்து உள்ளது.

    இதனால் லாரிகள் வந்து செல்வதற்கு வசதியாக வெள்ளை கோபுரத்தின் கீழ் பகுதியில் சுமார் 5 அடி உயரத்திற்கு மணலால் மூடப்பட்டது. காலப்போக்கில் தானியங்களை சேமித்து வைக்க நகரின் வேறு பகுதிகளில் கிட்டங்கி கட்டப்பட்ட பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து அவை மாற்றப்பட்டன. ஆனாலும் வெள்ளை கோபுரத்தின் கீழ் பகுதியில் மூடப்பட்ட மணல் பகுதி அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.

    வெள்ளை கோபுரத்தின் அடிப்பகுதியை மூடி உள்ள மணலை அகற்றி அதன் உண்மையான அழகை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 20 அடி நீளத்திற்கு 5 அடி ஆழத்தில் மூடப்பட்டு இருந்த மணல் அகற்றப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தற்போது வெள்ளைக்கோபுரம் பழமை மாறாமல் புராதன அழகுடன் காட்சி அளிக்கிறது. இந்த சீரமைப்பு பணியை பக்தர்கள் பாராட்டி வருகிறார்கள்.
    Next Story
    ×