search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்களைப் போக்கும் பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
    X

    பாவங்களைப் போக்கும் பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

    பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என இரு சிவாலயங்களை கொண்ட ஊர் என பல்வேறு பெருமைகள் கொண்டு விளங்கும் பழமையான தலம் விழுப்புரம் பிரம்மதேசம் ஆகும்.
    பல்லவன், சோழன், பாண்டியன், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலம். அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர். பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என இரு சிவாலயங்களை கொண்ட ஊர் என பல்வேறு பெருமைகள் கொண்டு விளங்கும் பழமையான தலம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்த பிரம்மதேசம் ஆகும்.

    பிரம்மதேசம் என்பது ‘பிரம்மதேயம்’ என்ற பெயரில் இருந்து மருவி வந்துள்ளன. அந்தணர்களுக்குத் தானம் தந்த ஊர் என்பதால் பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்ட இத்தலம், நாளடைவில் மருவி பிரம்மதேசம் ஆனது. இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாதாளீஸ்வரர் ஆலயம் ஊரின் நடுவிலும், பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் ஊரின் வடக்குப் பகுதியில் ஏரிக்கரையின் அருகேயும் இருக்கின்றன. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்லும் வழியில் தேரடி விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது.

    பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் :

    பிரம்மதேசத்தின் வடமேற்கே, ஏரிக்கரை அருகே பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வடக்கே உயர்ந்த மலைகள், வயல்வெளிகள் நம் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. ஆலயம் கிழக்கு நோக்கி பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோவில் சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். ஆய்வின் போது கிடைத்த துர்க்கை சிலையானது, இது பல்லவர் காலத்திலும் இருந்திருக்கலாம் என்பதை உறுதி செய்கிறது.

    காளமேகப் புலவர் வாழ்ந்த ஊர் எண்ணாயிரம் ஆகும். இவருக்கும், அவ்வையாருக்கும் நிகழ்ந்த பாடல் போட்டிகள் மிகவும் போற்றத் தக்கதாகும். மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய ‘மீனாட்சி கலித்தொகை’யில் இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சி மகா பெரியவரின் தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் பிரம்மதேசம் பற்றியும், எண்ணாயிரம் குறித்தும், அந்தணர்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இப்பகுதி குறித்தும், அங்கு நிகழ்ந்த மன்னர்களின் வாழ்க்கையைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆலய அமைப்பு :

    கிழக்கே நோக்கிய இவ்வாலயம், இன்று இந்தியத் தொல்லியல்துறை மூலமாக நல்ல முறையில் பழமை மாறாமல் புனரமைப்பினால் புதுப்பொலிவினைப் பெற்று வருகிறது. நந்திதேவர் மேற்குநோக்கி இறைவனை வழிபட, வலதுபுறம் பெரிய மண்டபம் உள்ளது. இது பழைய அம்மன் சன்னிதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேற்கு நோக்கி உள்ளே நுழைந்தால், பிரமாண்ட திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. இதில் இரட்டைப் பிரகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருண்டை வடிவ கல்தூண்கள் நேர்த்தியாக அணிவகுக்க, நாற்புறமும் கல்மண்டபத்தினைத் தாங்கி நிற்கின்றன. எண்ணாயிரத்தில் கல்விச் சாலை இம்மண்டபத்தில் செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    மகாமண்டபம் முன்புறம், பிரமாண்ட முகமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் நான்கு வரிசையில் பன்னிரண்டு தூண்கள் இருக்கிறது. பிரகாரத்தில் கலைநயம் மிக்க விநாயகர், லிங்கம், நின்ற கோல விநாயகர், வள்ளி– தெய்வயானையுடன், வஜ்ஜிரப் படை, சக்திபடை ஏந்திய முருகப்பெருமான், துர்க்கை, பைரவர் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. வடதிசையில் சண்டிகேஸ்வரர், அருகே நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

    தேவக்கோட்டத்தில், தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மன் ஆகியோர் காட்சி தருகின்றனர். முப்புறமும் 24 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. லிங்கத்தை வழிபடும் அடியார், பசு, காகம், நாகம், மீன் ஆகிய சிவபுராணச் சிற்பங்களும், பஞ்சதந்திரக் கதைகளை நினைவுபடுத்தும் சிற்பங்களும் இக்கோவிலின் தனிச் சிறப்புகளாக உள்ளன.

    பிரம்மபுரீஸ்வரர் :

    கிழக்கு நோக்கிய கருவறை சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் எழிலான தோற்றத்தில் வட்ட வடிவ ஆவுடையாராக, உயரமான பாணலிங்கத் திருமேனியாக பிரம்மபுரீஸ்வரர் அருட்காட்சி வழங்குகின்றார். இறைவனின் திருவுருவம், பல நூற்றாண்டுகளைக் கடந்து புதுப்பொலிவோடு காட்சிதருவது, நம்மை வியப்பில் ஆழ்த்தி, மெய்சிலிர்க்க வைக்கிறது.

    முகமண்டபத்தின் வடக்கே, தெற்குநோக்கிய தனிச் சன்னிதியில் அன்னை பெரியநாயகி காட்சியளிக்கின்றாள். பெயருக்கு ஏற்றபடியே பெரியநாயகியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மேல் வலது கரத்தில் அல்லி மலரையும், மேல் இடது கரத்தில் தாமரை மலரையும் தாங்கி, கீழ் வலது கரத்தில் அபய முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் வரத முத்திரையோடும் காட்சி அளிக்கின்றாள். அன்னையின் வடிவமும், கலைநயமும், நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகின்றது. அன்னை, சோழர் காலத்தைச் சார்ந்தவர் என்பது ஆய்வாளர்களின் முடிவு ஆகும்.

    விழாக்கள்:

    மாசி மகத்தன்று வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மனேரி சாஸ்தா கோவிலுக்குச் சென்று அங்கே தீர்த்தவாரி நடைபெறும். அதன்பின் பிரம்மதேசத்தில் அன்று மாலை வீதியுலா நடத்தப்படும். இதுதவிர, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இது இந்தியத் தொல்லியல் துறையின் ஆலயம் என்பதால், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ஆலய தரிசனம் செய்யலாம். தீபாராதனையைக் காண வேண்டுமெனில், அர்ச்சகர் இருக்கும் நேரத்தில் மட்டுமே சாத்தியம்.

    அமைவிடம் :


    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் பிரம்மதேசம் அமைந்துள்ளது. விழுப்புரம் – செஞ்சி சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், செஞ்சியில் இருந்து தென்கிழக்கே 21 கிலோமீட்டர் தூரத்திலும் பிரம்மதேசம் இருக்கிறது. விழுப்புரத்திற்கும் செஞ்சிக்கும் நடுவே 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நேமூரில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் சென்றால் பிரம்மதேசத்தை அடையலாம். நேமூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

    திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் கூட்டேரிப்பட்டு என்ற இடத்தை கடந்து, சங்கராபரணி ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும், பேரணி கூட்டுச்சாலை வரும். அதிலிருந்து பெரியதச்சூர், எசாலம் வழியாகவும் பிரம்மதேசம் வரலாம்.
    Next Story
    ×