search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வில்வ நாதேஸ்வரர் கோவில் - திருவல்லம்
    X

    வில்வ நாதேஸ்வரர் கோவில் - திருவல்லம்

    இந்த கோவில் மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம்.
    கோவில் வரலாறு :

    நிவா நதியின் கரையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு முகப்பு வாயில் மற்றும் முன் மண்டபம், அதையடுத்து தெற்கு நோக்கிய 4 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு "நீ, வா" என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. "நீ, வா" நதி நாளடைவில் நிவா நதியாயிற்று என்கின்றனர். இன்று பொன்னை ஆறு என்ற பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான் பண்டைநாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

    இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலமுபுறம் நீராழி மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது. உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளும், சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது.

    இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது.

    வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது.

    மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே கிழக்கு நோக்கி சதுர பீடஆவுடையார் மீது மூலவர் வில்வ நாதேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாக்க் காட்சி தருகிறார். உள்சுற்று வலம் வரும்போது மூலையில் "பிராமி" உருவச்சிலையுள்ளது. மூலவர் சந்ந்ததிக்குள் நுழைய தெற்கு நோக்கிய பக்கவாயிலும் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது.

    கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேஸ்வரர் சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன.

    பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகின்றது. மூலவர் வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் திருமேனிகள் சிற்பக் கலையழகு வாய்ந்தவை. இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடனபாவ முத்திரையுடன் விளங்குகின்றது. இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கும், சுவாமிக்கும் இடையில் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜன்ம சாபங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம்.

    தெய்வீகத் தன்மை வாய்ந்த நெல்லிக்கனியை இத்தலத்தில் தான் ஒளவையார் பெற்றார். விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம். தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப் பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இத்தலத்தில் சிறப்பு. அம்பிகை சந்நிதி முன் பலிபீடம், சிம்மம் உள்ளது.

    நந்தியெம்பெருமான் இத்தலத்தில் சுவாமியை நோக்கியிராமல் வெளி நோக்கி இருப்பதற்குரிய காரணத்தை தலபுராணம் விவரிக்கிறது. அடியவர் ஒருவர் இத்தலத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவலுள்ள கஞ்சனகிரி மலையிலுள்ள திருக்குளத்திலிருந்து இறைவன் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுத்து வருவது வழக்கம்.

    கஞ்சன் எனும் அசுரன் அடியவரை நீர் எடுக்கவிடாமல் துன்புறுத்தவே மனம் வருந்திய அவர் இறைவனிடம் முறையிட்டார். சிவபிரான் நந்திதேவரை அனுப்பினார். நந்தியெம்பெருமான் அசுரனை தன் கொம்புகளால் குத்தி எட்டு பாகங்களாக கிழித்து போட்டார். சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். கஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின.

    இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம். கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. இம்மலையில் (காஞ்சனகிரியில்) ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுகிறது. சித்திரை, தை மாதங்களில் இந்த ஜோதி நன்கு தெரியும். இம்மலையின் சிறப்பு அறிந்து மக்கள் தற்போது செல்லத் தொடங்கியுள்ளனர்.

    திருஞானசம்பந்தர் பதிகத்தில் திருவல்லம் என்றும், அருணகிரிநாதரின் திருப்புகழில் திருவலம் என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

    இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    இந்த சிவஸ்தலம் சென்னையில் இருந்து சுமார் 120 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை - காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் இராணிப்பேட்டை சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ளது. வாலாஜா, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து திருவல்லம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருவல்லம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் இருக்கிறது.

    அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
    திருவலம் அஞ்சல்
    வழி இராணிப்பேட்டை
    காட்பாடி வட்டம்
    வேலூர் மாவட்டம்
    PIN - 632515

    Next Story
    ×