search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்கடேஸ்வரர் திருக்கோவில்
    X

    அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்கடேஸ்வரர் திருக்கோவில்

    நண்டு வழிபட்ட காரணத்தால் இத்தல இறைவன் ‘கற்கடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி என்ற தலத்தில் அமைந்துள்ளது கற்கடேஸ்வரர் திருக்கோவில். இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சோழமன்னன் திடீரென்று நோய்வாய்ப்பட்டான். வாளெடுத்து வீசிய அவனது கைகளை அசைக்க முடியவில்லை. கால்களை மடக்க முடியவில்லை. சோர்வுற்று விட்டான். பலநாள் படாத பாடுபட்டான். அரண்மனை வைத்தியர்களும், வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட வைத்தியர்களும் கைவிட்டு விட்டனர்.

    இதையடுத்து சிவபக்தனான அந்த மன்னன், இறைவன் ஒருவனே தன்னை குணமாக்கும் வல்லமை கொண்டவன் என்று நினைத்து இறைவனிடமே சரண்புகுந்தான்.

    இந்த நிலையில் ஒருநாள், வெளியூர் மருத்துவரென்று சொல்லிக் கொண்டு ஒரு முதியவரும், மருந்து பெட்டியைத் தூக்கியபடி அவரது மனைவியும் அரண்மனைக்கு வந்தனர். மன்னனின் கையைப் பிடித்து நாடி பார்த்துவிட்டு, முதியவர் தன் மனைவியை நோக்கி கண் ஜாடை காட்டினார். இதையடுத்து அந்த அம்மையார், மருந்துப் பெட்டியைத் திறந்து, கொஞ்சம் திருநீற்றை, ஒரு குவளை நீரில் கரைத்துக் குடிக்கச் சொன்னார்.

    என்னே அதிசயம்! சற்று நேரத்தில் வாத நோய் நீங்கி மன்னன் புத்துணர்வு பெற்று எழுந்தான். அவன் அந்த மருத்துவ தம்பதியரின் கால்களில் விழுந்து வணங்கினான். அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக வழங்கினான். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அப்படியானால் அரண் மனையிலேயே தலைமை வைத்தியராக இருக்கும்படி மன்னன் கேட்டுக்கொண்டதற்கும் அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மன்னன், அந்த மருத்துவ தம்பதியர் அறியாவண்ணம் அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து சென்றான். அப்போது ஓரிடத்தில் மறைந்தும், மறையாமலும் மண்ணில் கிடந்த ஒரு சிவலிங்கத்திற்குள், அந்த மருத்துவத் தம்பதியர் இருவரும் ஐக்கியமானதை பார்த்து ஆனந்த அதிர்ச்சி கொண்டான் மன்னன். வந்தது ஈசனும், அம்பாளும் என்பதை உணர்ந்து அவனது உள்ளம் மகிழ்ச்சிக் கூத்தாடியது.

    பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அந்த இடத்திலேயே கோவில் அமைத்தான். அம்பாளின் சிலை உருவம் கிடைக்காததால், மருந்து கொண்டு வந்து தனக்கு வைத்தியம் செய்த அன்னையை, ‘அருமருந்து நாயகி’ என்ற பெயரில் புதியதாக சிலை செய்து பிரதிஷ்டை செய்தான். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து, அம்பாளின் திருவுருவம் கிடைத்தது. அந்த அம்மனுக்கு ‘அபூர்வநாயகி’ என்று பெயரிட்டு தனிச் சன்னிதியில் பிரதிஷ்டை செய்தான். அதன்படி இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியபடி இரண்டு சன்னிதிகளில் இரண்டு அம்பிகைகள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

    தல வரலாறு :


    ஒரு முறை துர்வாச முனிவர் சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கந்தர்வன் ஒருவன், துர்வாச முனிவரின் நடையைப் பார்த்து, ‘நீர்! நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர்’ என்று கேலி செய்தான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், அந்த கந்தர்வனை நண்டாக பிறக்கும்படி சபித்தார். செய்த தவறை எண்ணி வருந்திய கந்தர்வன், துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கோரினான். பின்னர் துர்வாசரின் அறுவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் இறைவனை பூஜித்து, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தான்.

    அதே வேளையில் இந்திரனும் ஒரு சாபத்தின் காரணமாக, இந்த இறைவனை தினமும் 1008 தாமரை மலர் கொண்டு வழிபட்டு வந்தான். இந்த நிலையில் மலர் குறைவதையும், அதை எடுத்து நண்டு ஒன்று பூஜை செய்வதையும் கண்ட இந்திரனுக்கு கோபம் வந்தது. தான் வழிபட வைத்திருக்கும் மலரை, அற்பமான நண்டு ஒன்று எடுத்துச் சென்று பூஜை செய்வதா என்ற ஆணவத்தால் நண்டை தன் வாள் கொண்டு வெட்டினான்.

    அப்போது நண்டானது, சிவலிங்கத்தின் பாணத்தில் இருந்த துளைக்குள் சென்று மறைந்து கொண்டது. இதனால் இந்திரன் வீசிய வாள், சிவலிங்கத்தின் மீது பட்டு காயம் ஏற்பட்டது. சிவலிங்கத்தின் மீது துளையையும், வாள் வெட்டையும் இப்போதும் பார்க்க முடியும். பிறகு இந்திரன் தன் செயலுக்கு வருந்தி திருந்தியதால், இந்த ஊர் ‘திருந்துதேவன்குடி’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. நண்டு வழிபட்ட காரணத்தால் இத்தல இறைவன் ‘கற்கடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.



    மருத்துவச் சிறப்பு :

    இந்த ஆலயம் மருத்துவ சிறப்பு வாய்ந்த திருத்தலம் என்பதை திருஞான சம்பந்தர் பாடிய பதிகத்தின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.

    ‘மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் வேண்டில் இவை
    புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
    திருந்து தேவன் குடி தேவர் தேவு எய்திய
    அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!’

    மருத்துவத்திற்குத் தந்தையான தனவந்திரி முனிவர் தங்கி வழிபட்டதலம் என்பதால், அவரது திருஉருவும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது.

    ஒவ்வொரு சிவாலயத்திலும் வில்வம், வன்னி, கொன்றை போன்ற தல விருட்சங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கே மற்ற எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக சிறியா நங்கை, பெரியா நங்கை என்ற மருத்துவ மூலிகைகள் தல விருட்சமாக இருப்பதைக் கொண்டே, இந்தத் தலத்தில் மருத்துவ மகிமையை அறிந்து கொள்ளலாம்.

    இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தமும் ‘நவபாஷாண தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது. பழுதடைந்திருந்த இந்தத் திருக்கோவிலில் தற்போது புதிய மண்டபம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற கோவில்களில் இல்லாத முறையில் இங்கே கருங்கல் விமானத்தின் கீழ், கற்கடேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார்.

    நண்டு துளை போட்ட விநாயகர் சிலை, கற்கடக விநாயகர் என்ற பெயரில் இந்த ஆலயத்தில் இருந்ததாகவும், தற்போது அது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் மூலிகைச் செடிகள் நிறைந்த காடாக இருந்த இடத்தில், சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெய்யை உட்கொண்டால் அனைத்து நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இத்திருக்கோவிலில் தன்வந்திரி யாகம், சந்திர தோஷ யாகம் போன்றவைகளைச் செய்து உடல் நோய்க்கும், கிரக தோஷங்களுக்கும் பரிகாரம் காண்கிறார்கள்.

    யோக சந்திரன் :

    புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. கோவிலின் நுழைவு வாசலில் யோக சந்திரன் சன்னிதி அமைந்துள்ளது. இவர் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள், இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை.

    அமைவிடம் :

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் புறவழிச்சாலையில் 4 கிலோமீட்டர் சென்றால் திருவிசநல்லூர் என்ற பாடல் பெற்ற திருத்தலம் இருக்கும். அதிலிருந்து உள்ளே 1 கிலோமீட்டர் தொலைவில் வயல் வெளிகளுக்கு இடையே அருமையான கிராமத்துச் சூழலில் அமைந்திருக்கிறது இந்தத் திருத்தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 42–வது தலமாக இது விளங்குகிறது. அருகில் உள்ள மற்ற சிவத்தலங்கள் திருவிடை மருதூர் மற்றும் திருபுவனம் ஆகும்.

    Next Story
    ×