search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆவணியில் அருள் பொழியும் புன்னைநல்லூர் முத்துமாரி கோவில்
    X

    ஆவணியில் அருள் பொழியும் புன்னைநல்லூர் முத்துமாரி கோவில்

    திருச்சி சமயபுரம், பண்ணாரி, திருவேற்காடு என்ற வரிசையில் தஞ்சை புன்னை நல்லூரும், மக்களின் மனதில் இடம் பிடித்த பிரார்த்தனை தலமாகும்.
    பண்டையத் தமிழர்களின் சக்தி வழிபாட்டில் மாரியம்மனுக்கே முதலிடம். மாரி எனில் ‘மழை’ என்ற பொருள் தருவதால் மழை பெறவும், நோய் பயம் நீங்கவும், பக்க துணையாக நிற்கவும், ஆகம முறைகள் தோன்றும் முன்னுரே கிராமங்கள் தோறும் மாரிக்குக் கோவில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் தாய் தெய்வம் மாரியம்மன் எனில் மிகை இல்லை. திருச்சி சமயபுரம், பண்ணாரி, திருவேற்காடு என்ற வரிசையில் தஞ்சை புன்னை நல்லூரும், மக்களின் மனதில் இடம் பிடித்த பிரார்த்தனை தலமாகும்.

    சோழர்களும், நாயக்கர்களும், மராட்டியர்களும் ஆட்சி செய்த தஞ்சை மண்ணில் கிழக்கு திசை காவல் தெய்வமாக புன்னைநல்லூர் முத்துமாரி, புகழோடு விளங்குகிறாள். மாரியம்மா, மாரியாத்தா, மகமாயி என்பதெல்லாம் மக்களின் அன்பு அழைப்புகள்.

    ஞாயிறு விரதம்:

    எல்லா அம்மன்களுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆடிமாதமும் விசேஷம் என்றால் தஞ்சை முத்து மாரிக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும், ஆவணி மாதமும் விழாக்காலம் ஆகும். ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழாவும், திருத்தேரும், தெப்பமும் உற்சவமும் பரவசப்படுத்தும்.

    இன்றும் தஞ்சை மக்களில் பலர் எந்த ஊரில் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும், ஆவணி ஞாயிறு அன்று பக்தி சிரத்தையுடன் இருப்பதையும் பார்க்கிறோம். கோவிலில் கூட்டம் அதிகாலையிலிருந்தே அலைமோதும் மகளிர், ஆண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் கூட தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஞாயிறு இரவு கோவில் மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் படுத்துறங்கி காலையில் எழுந்து அம்மன் திருவடி தொழுது வீடு திரும்புவார்கள். அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு கூட்டம் கோவில் நிரம்பி வழிந்து குளக்கரைகளிலும் கோவிலுக்கு வெளியே உள்ள இடங்களிலும் குடும்பத்துடன் படுத்து உறங்கி நேர்த்தி கடனைச் செலுத்துகிறார்கள்.

    பிரார்த்தனை:

    மனிதர்களின் உடலில் ஏற்படும் பரு, கட்டிகள் தோல் நோய் ஆகியவை நீங்க கோவிலின் வட கிழக்கு பகுதியில் உள்ள குளத்தில் வெல்லக் கட்டி களைப் போட்டு நோய் கரைய வேண்டும் என்றும் உப்பு வாங்கி தொட்டியில் கொட்டிவிட்டு உப்பு போல உதிரவேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வது நம்பிக்கையின் உச்சம்.

    கண் நோய் உடற்பிணி தீர வேண்டிக் கொண்டு தங்கம் வெள்ளியாய் உறுப்புகளைச் செய்து உண்டியலில் போட்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

    அம்மை நோய் தீர அம்பிகையையே ஏற்ற மருத்துவச்சி என்று நம்பி வேப்பிலையால் தடவி கொடுப்பது பக்தி மட்டுமல்ல மருத்துவம் சம்பந்தப்பட்டதும் கூட. அம் பாளின் கருவறையைச் சுற்றி வேண்டிக்கொண்டால் நோயின் தாக்கமும் காய்ச்சலும் குறையும் என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து. மங்கையரின் மங்கலச் சக்தியாக மட்டுமல்ல மாந்தரின் காக்கும் சக்தியாகவும் அருள் பாலிக்கிறாள் இத்தல அன்னை.

    கோவிலின் தோற்றம்:

    தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன், வெங்கோஷி ஒரு முறை சமயபுரம் சென்று அங்கு தங்கி வழிபடும் போது தஞ்சைக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் புன்னை மரக்காட்டில் புற்று வடிவில் தான் இருப்பதினை குறிப்பால் உணர்த்தினாள். 1680-ல் நடந்த நிகழ்ச்சி, அவர் தஞ்சை வந்து பார்த்தபோது புன்னை வனத்தில் புற்று இருப்பதினை கண்ணுற்று, சிறிய கூரையமைத்து புன்னைநல்லூர் என்று பெயரிட்டார்.



    அதன் பிறகு தஞ்சையை ஆண்ட துளஜா மன்னனின் மகளுக்கு வைசூரி என்ற அம்மை நோய் உண்டாகி, கண் பார்வையையும் மங்கச் செய்தது. அப்போது அம்பிகை ஒரு சிறுமியாகக் கனவில் தோன்றி புன்னை நல்லூர் வரச் சொன்னாள். அரசர் அவ்வாறே செய்ய அந்த அற்புதம் நடந்தது. ஆம்! அரசிளங்குமரி மீண்டும் கண்பார்வை பெற்று புதிய பொலிவுடன் மீண்டாள்.

    மகிழ்ச்சி அடைந்த துளஜா ராஜா சிறிய கோவிலையமைத்து திருச்சுற்றினையும் எழுப்பினார். தவவலிமையில் சிறந்த ஞானியான சதா சிவம் பிரமேந்திரர், புற்று மண்ணாக இருந்த மாரிக்கு திருவடிவம் கொடுத்து எந்திரப் பிரதிஷ்டை செய்து சக்தியூட்டினார். பிறகு, ஆண்ட அரசர்கள் மண்டபங்களும், திருச்சுற்றுகளும், ஏழுநிலை ராஜகோபுரமும் கட்டி ஆலயத்தை விரிவு படுத்தினார்.

    புற்று மண்ணால் உருவாக்கப்பட்ட புன்னை நல்லூர் புனிதவதி, படைக்கலம் ஏந்திய நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் கருணை மழை பொழியும் கண்களுடன் காட்சி தருகிறாள். இவருக்கான அலங்காரங்களில் தாழம்பூ உடையும், தங்க கவசமும் கொள்ளை அழகு தரும்.

    முத்துமாரி :

    அன்னைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டல காலம் தைலக் காப்பு சாற்றப்படுகிறது. அப்போது திருமேணியில் வெப்பம் அதிகரித்து முத்து முத்தாக வியர்வை வெளிப் படும். அதனால் ‘முத்துமாரி’ என்று வணங்கப் படுகிறாள். குளிர்ச்சியாக இளநீர், தயிர் படைக்கப்படுகிறது. துரிகையில் அம்பாளின் திருவுருவம் வரையப்பட்டு வழிபடப்படுகிறது.

    முத்துமாரி உற்சவ மூர்த்திக்கும், அருகே தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கி நிற்கும் விஷ்ணு துர்க்கைக்கும் தினசரி அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப் பெறுகின்றன. மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்த ஆலயத்தின் இரண்டாவது சுற்றில், தென்கிழக்கு மூலையில் பேச்சியம்மன் போன்ற கிராம தேவதைகள் மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மகமாயியைக் கும்பிட்டு விட்டு, குழந்தைகளின் காக்கும் தெய்வமான பேச்சி அம்மனை பூசிப்பது ஒரு மரபு. மூன்றாவது திருச்சுற்றின் அன்னையின் விமானத்துக்கு நேர் பின்புறம், தல விருட்சமான புன்னை மரம் உள்ளது.

    ஆடிப் பூச்சொரிதல் :

    தஞ்சை தரணிக்கு மட்டுமல்ல.. உலகெங்கிலுமிருந்து எந்த வித இன பேதமும் இல்லாது மக்களைத் தன்பால் ஈர்த்துள்ளார், புன்னைநல்லூர் முத்துமாரியம்மன். கருணைக் கண்களால் ரட்சிக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில், ஆவணி மாதம் மட்டும் தான் விழாவா என்றால்? மற்ற கோவில்களைப் போல ஆடி வெள்ளியும் சிறப்புடையதாகவே கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் கூடை கூடையாக பல வண்ணப் பூக்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக ஏந்தி வந்து, ஈஸ்வரியின் திருவுருவே மூழ்கும் வண்ணம் பூச்சொரியும் விழாவை நடத்துகிறார்கள். இந்த நிகழ்வைக் காண ஆயிரம் கண் இருந்தாலும் போதாது. இவ்வாண்டு 33 வகை மலர் களால் இந்த பூச்சொரியும் விழா நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தரிசன நேரம் :


    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் 88 கோவில் களில் முதன்மை ஆலயமாக புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஆவணி நாட்களில் அதிகாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.

    தஞ்சாவூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் நாகை நெடுஞ்சாலையில் உள்ள புகழ்பெற்ற புன்னைநல்லூர் கோவிலுக்கு எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து, தொடர்வண்டி போன்ற பயண வசதிகள் உண்டு.
    Next Story
    ×