உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி - அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் முழு ஆதரவு

ஜேவியர் மிலே பதவியேற்றது முதலே இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்.
இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர்
Published on

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முழு ஆதரவை அளித்துள்ளார்.

அர்ஜென்டினா தூதர்

இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதர் ரப்பி ஷிமோன் ஆக்சல் வாஜ்னிஸ் உடனான சந்திப்பின் போது நேதன்யாகு தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பில், அர்ஜென்டினா தூதர் மூலமாக அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில், "ஜேவியர், நீங்கள் இஸ்ரேலின் உண்மையான நண்பர். நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டி உட்பட அனைத்து விஷயங்களிலும் நாங்கள் உங்களுடனும், அர்ஜென்டினாவுடனும் என்றும் இருப்போம். எனது வாழ்த்துகள்!" என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அர்ஜென்டினா தூதர் வழியாக அதிபர் ஜேவியர் மிலே அனுப்பிய செய்தியில், "நீங்கள் எனது சிறந்த நண்பர், எப்போதும் எங்களை ஆதரிப்பவர். எனக்காக நீங்கள் அர்ஜென்டினா அணியை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று தனது நன்றி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - அர்ஜென்டினா உறவு

2023 டிசம்பரில் அர்ஜென்டினாவின் அதிபராக ஜேவியர் மிலே பதவியேற்றது முதலே இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்.

பதவியேற்ற பிறகு மிலே இதுவரை மூன்று முறை இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடைசியாக, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் சென்றிருந்தபோது பிரதமர் நேதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

அதிபர் ஜேவியர் மிலேயின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையும், இஸ்ரேலுக்கு ஆதரவான அவரது வெளியுறவுக் கொள்கைகளையும் பிரதமர் நேதன்யாகு பலமுறை பாராட்டியுள்ளார்.

போர் குற்றவாளி

இதனிடையே அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற இருக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டிற்காக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்தார்.

நேதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி என அவர் தெரிவித்தார்.

உலககோப்பை இறுதிப் போட்டி

இன்று நள்ளிரவு நடக்க இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மொத உள்ளன.

உலகமே உற்று நோக்கும் இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜென்டினாவை எதிர்கொள்ள அனைத்து வியூகங்களை பயன்படுத்துவோம் என ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com