

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக, இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை சந்தித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அடுத்த கட்டமாக, பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீசை சந்தித்த பிரதமர் மோடி இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆஸ்திரேலிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று நியூசிலாந்து சென்றடைந்தார். தலைநகர் ஆக்லாந்து சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ஆக்லாந்தின் புகழ்பெற்ற 'ஸ்கை டவர்' இந்திய மூவர்ண கொடியில் உள்ள நிறங்கள் போல் அலங்கரிக்கப்பட்டது.
பிரதமர் மோடி நியூசிலாந்திற்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை வரவேற்கும் வகையில், ஆக்லாந்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்கை டவர் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணங்களால் பிரமாண்டமாக அலங்கரித்து ஒளிரவிடப்பட்டது.
இந்தப் பயணத்தின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். நியூசிலாந்து வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.