ரபேல் போர் விமானத்தின் விலை 41.42 சதவீதம் உயர்ந்தது ஏன்? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

126 போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கியதால் ரபேல் ஒப்பந்தத்தில் 41.42 சதவீதம் விலை உயர்த்தப்பட்டதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #Rafalejet #Rafalescam #PChidambaram
ரபேல் போர் விமானத்தின் விலை 41.42 சதவீதம் உயர்ந்தது ஏன்? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Published on

நாட்டின் எல்லைப்பகுதிகளில் ரோந்துப்பணிக்காகவும் விமானப்படையின் பிற தேவைகளுக்காகவும் பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 (7 ஸ்குவார்டன்) ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு மத்தியில் முன்னர் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தீர்மானித்தது. விற்பனைக்கு பின்னர் இவ்விமானங்களை பராமரிக்கும் பொறுப்பும் ரபேல் நிறுவனமே ஏற்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதற்கான பேரம் நடந்துவந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் அமைந்தது.

முன்னர் பரிசீலனையில் இருந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை செய்த இந்த அரசு 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ரபேல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது. இந்த விமானங்களை பராமரிக்கவும் பழுது பார்க்கவும் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு உள்ஒப்பந்தத்துடன் புதிய பேரம் பேசி முடிக்கப்பட்டது.

புதிதாக வாங்கும் இந்த போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை மத்திய அரசுக்கு சொந்தமான ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்துக்கு அளிக்காமல் முன் அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் மூலம் தனது நண்பரான அனில் அம்பானிக்கு தனிப்பட்ட முறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் தேடித்தந்ததாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.

526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன, உயர்த்தியவர்கள் யார்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பி இருந்தார்.

இந்த பிரச்சனையை மையமாக வைத்து சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்தன.

பிரபல ஆங்கில நாளேட்டில் சமீபத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டியுள்ள ப.சிதம்பரம், விமானப்படைக்கு தேவையான 7 ஸ்குவார்டன் (ஒரு ஸ்குவார்டன் என்பது 18 விமானங்களை கொண்ட தொகுப்பாகும்) போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 (2 ஸ்குவார்டன்) போர் விமானங்களை வாங்கியதால் அவற்றின் விலையில் 41.42 சதவீதம் உயர்ந்ததற்கு இந்த அரசு காரணமாகி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், விமானப்படையின் அத்தியாவசிய தேவையான 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கிய வகையில் நாட்டின் பாதுகாப்பில் இந்த அரசு சமரசம் செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Rafalejet #Rafalescam #PChidambaram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com