விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சனை?- பிரேமலதா விஜயகாந்த்

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது.ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை.
விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சனை?- பிரேமலதா விஜயகாந்த்
Published on

மதுரை:

மதுரையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். முடிவில் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை அவர்கள் ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என தெரியவில்லை.

மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.

நடிகர் விஜயின் கோட் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.

ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டியது அரசாங்கம். ஆனால் தடுக்காமல் தவறிவிட்டது

முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

விஜய் மாநாடு நடத்தி, கட்சி துவங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com