கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி- மு.க.ஸ்டாலின்

பூமணி அவர்களுக்குக் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி மகிழ்ந்ததையும் நினைவு கூர்கிறேன்.
மு.க.ஸ்டாலின்
Published on

எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பூமணி மறைவு

தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பூமணி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்ததுடன் பூமணியின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேதனை

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான பூமணி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கையையும் சமூகத்தில் நிலவிய கட்டமைப்புகளையும் மிக எளிமையான மொழியில் வெளிப்படுத்திய படைப்பாளராகத் பூமணி அவர்கள் திகழ்ந்தார். தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத பல வட்டார வழக்குச் சொற்கள் அவரது படைப்புகள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டன. பூமணி அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்த 'அஞ்ஞாடி' எனும் புதினத்தின் தலைப்பும் கூட அத்தகையதே.

எழுத்தாளராக மட்டுமின்றி, கருவேலம்பூக்கள் எனும் திரைப்படத்தையும் எழுதி இயக்கித் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார். அவரது வெக்கை நாவல் அசுரன் திரைப்படமாக மாறியபோது, மேலும் பல இளம் வாசகர்களும் பூமணியின் எழுத்துகளைப் படிக்கத் தொடங்கினர்.

ஆழ்ந்த இரங்கல்

அவரது எழுத்துப் பணிகளைப் போற்றும் வகையில், திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் பூமணி அவர்களுக்குக் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி மகிழ்ந்ததையும் நினைவு கூர்கிறேன்.

இயல்பான நடையில் வீரியமான படைப்புகளைத் தந்து தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய பூமணி அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com