TN Assembly Election| எங்கள் கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை- எடப்பாடி பழனிசாமி

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதே தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுக்கு சான்று.
TN Assembly Election| எங்கள் கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை- எடப்பாடி பழனிசாமி
Published on

தூத்துக்குடி:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஏற்கனவே எழுச்சி பயணத்தை தொடங்கி முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்திருக்கிறேன். இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் தமிழகத்தில் இருக்கின்றன அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க திட்டமிட்டு நான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.

14.12.2023 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம், 17.12.2023 முதல் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தி.மு.க. அரசு சென்னையை போன்று தென் மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.

அதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டது. 18-ந்தேதி முதலே எங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். 19-ந் தேதி உடனடியாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் நான் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிய பகுதிக்கு நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19-ந்தேதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி பக்கிள் ஓடையை தூர் வாரி சரி செய்ய 80 சதவீத பணிகள் செய்திருந்தோம். தி.மு.க. ஆட்சி வந்த பிறகு 20 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் தூத்துக்குடி நகரில் வெள்ளம் தேங்கி இருக்காது. இதனால் வெள்ளம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதே தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுக்கு சான்று.

அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. கூட்டணியில் இணக்கமாக செயல்படுகின்றோம். எங்கள் கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை. எந்தவித சலசலப்பு இன்றி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல், தற்போது 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கி விரைந்து செயல்பட்டு வருகிறோம்.

தி.மு.க. கூட்டணியில் இது போன்று இல்லை. அங்கு தான் கூட்டணி கட்சிகளிடையே மனவருத்தம், குழப்பம் உள்ளது. ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சிரித்துக்கொண்டே அழுகின்றோம் என்று கூறுகின்றனர்.

புதிய தமிழகம் கட்சியினர் எங்களிடம் நேரடியாக பேசவில்லை. 10 தொகுதிகள் கேட்டு பின்னர் 5 தொகுதிகள் வேண்டும் என்றனர். பேச கூடாது என்று இருந்தோம். அவர் எங்களைப் பேச வைக்கின்றார். கடந்த காலங்களில் ஒட்டு மொத்தமாக 33 ஆயிரம் வாக்குகள் பெற்ற அந்தக் கட்சி அதிக இடங்கள் கேட்டது. அதுவும் நேரடியாக கேட்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில் போதை கலாச்சாரம், பாலியல் குற்றங்கள் நிறைந்த ஆட்சியாக இருந்து வருகிறது.

காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை, 15 ஆண்டுகளாக மத்திய அரசில் அமைச்சர்களாக அங்கம் வகித்தும் அதனை மீட்க தி.மு.க. முயற்சி எடுக்கவில்லை. அ.தி.மு.க. கச்சத்தீவை மீட்க, முதற்கட்டமாக அதனை குத்தகைக்காவது எடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com