தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதில் தாமதம்..! வரவேற்க திரண்ட தொண்டர்கள் ஏமாற்றம்!

மு.க.ஸ்டாலின் வரும்போது வாசிக்கும்படி போலீசார் கட்டுப்பாடு விதித்தனர்.
TN EX CM MK Stalin
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் 2 வாரங்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.

மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார்.

தொண்டர்கள் திரண்டனர்

மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர். காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள்.

சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மேடை அமைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள். அதற்கும் மு.க.ஸ்டாலின் வரும்போது வாசிக்கும்படி போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் இசைப்பது நிறுத்தப்பட்டது.

தாமதம்

இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தபோது மு.க.ஸ்டாலின் வரும் விமானம் லண்டனில் இருந்து புறப்படுவது தாமதம் ஆனது. எனவே இன்று இரவு 8 மணிக்குதான் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் திரண்டு இருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் அன்பகம் கலை, தாயகம் கவி, எம்.கிருஷ்ணமூர்த்தி உள்பட திரண்டு இருந்த நிர்வாகிகள், கட்சியினரை திரும்பி செல்லும்படியும், இரவில் திரும்பி வருமாறும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் திரும்பி சென்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com