

பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தக்கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவிகணேசன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த மாதம் 22-ந்தேதி, தவெக தலைவரின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அந்த கட்சியினர், கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளின்போது மாணவர்களை த.வெ.க. தலைவருக்கு பிறந்தநாள் பாடவும், கோஷம் எழுப்பவும் செய்து உள்ளனர். கல்வி நிறுவனங்களில் அரசியல், மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும். அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர், மனுவிற்கு தலைமைச் செயலாளர், பள்ளி கல்வி செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.