

ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,
“ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. காவிரி நதிநீர் பிரச்னைக்கு அதிமுக நல்ல தீர்ப்பைப் பெற்றது. ஆண்டுக்கு 177.24 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என்ற உத்தரவை பெற்றோம். அதற்கு இப்போது குந்தகம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு தொடரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் தவெக அரசு புது நடுவர் குழுவை அமைக்க தீர்மானம் போட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்த நடுவர் மன்ற தேவையில்லாதது. குழப்பத்தை ஏற்படுத்தும்.
அதிமுக - திமுக கூட்டுக் களவாணி என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். அவர் வகிக்கும் பொறுப்புக்கு இது சரியானதா என்பதை யோசிக்கவேண்டும். அதிமுக கூட்டுக் களவாணி இல்லை, விஜய்தான் களவாணி. அதிமுக சார்பில், இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களை தங்களது கட்சிக்கு இழுத்ததுதான் களவாணித்தனம்.
60 நாட்களில் தவெக அரசு என்ன செய்துள்ளது? சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தால் மக்களுக்கு பயனா என்றால் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நான்காம்தர பேச்சாளர் போன்றுதான் முதலமைச்சர் பேசிவருகிறார்.
தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இதுபோன்று இல்லை. கூட்டணி கட்சி தலைவர்களை அணுசரிக்கும் வரையில் தவெக ஆட்சி நிலைத்திருக்கும். தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு. திமுக - அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை. நாங்கள் சொல்வதுதான் எங்களது கருத்து.
தீயசக்தி திமுக என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
தவெகவிற்கு சென்றால் அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்தார்கள். விஜய் பெரிய அல்வாவாக கிண்டி கொடுத்துவிட்டார். காங்கிரஸின் நிலைமை பரிதாபமானது. இன்னும் கொஞ்ச நாட்களில் விஜய்யின் மேக்கப் மேனிற்கும் அரசுப்பதவி கொடுக்கப்படும்.” என தெரிவித்தார்.