

திமுக ஆட்சி கட்டிலில் பல முறை அமர காங்கிரஸ் தொண்டர்கள் உழைப்புதான் காரணம். தனித்து திமுக போட்டியிட்டிருந்தால் ஆட்சியை பிடித்திருக்க முடியாது என்று அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் தவெக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ளது. காங்கிரசை சேர்ந்த விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் இன்று புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் காங்கிரசார் வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியதாவது:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் சில கோரிக்கைகளை வைத்தார். புதுவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக நிலம் தேவைப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் தேவைப்படும் 214 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தரும்படி கேட்டுள்ளார். அதேபோல புதுவை குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழகத்தின் அணைகளை திறப்பது, காவிரி நீர் பிரச்சனையில் இணைந்து செயல்படுவது என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கைகளை முழுமையாக முயற்சி செய்து தீர்ப்போம். தமிழகத்தையும், புதுவையையும் பிரித்து பார்க்க முடியாது. சமூகத்தாலும், பண்பாடு, கலாச்சாரத்தால் இரண்டும் ஒன்றுதான். புதுவையில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் புதுவையில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. 1967க்கு பிறகு 59 ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்றுள்ளது. எனக்கே வயது 51தான். நான் காமராஜர் ஆட்சியை கண்டதில்லை. ஆனால் காமராஜர் கண்ட கனவை நிறைவேற்ற உறுதியாக உள்ளோம். ஆட்சியில் பங்கு கொடுப்பது சாத்தியமில்லை என திமுக என்று கூறியது இன்று தவெகவால் சாத்தியமாகியுள்ளது.
திமுக ஆட்சி கட்டிலில் பல முறை அமர காங்கிரஸ் தொண்டர்கள் உழைப்புதான் காரணம். தனித்து திமுக போட்டியிட்டிருந்தால் ஆட்சியை பிடித்திருக்க முடியாது. வரும் 15ம் தேதி காமராஜர் பிறந்தநாளை தமிழகத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளோம். லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் விழா கொண்டாடப்படும். உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தல்களில் புதுவை, தமிழகம் இணைந்து செயல்படுவோம். 2029ல் தலைவர் ராகுல் பிரதமர் ஆவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ பாலன், காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதி, தணுசு, பிரதீஷ்இருதயராஜ், பஞ்சகாந்தி, இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.