

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அரசின் 4 அல்லது 5 மாத செலவினங்களுக்கு அனுமதி பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக கடந்த மார்ச் 2-ந்தேதி அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. கடந்த ஜூன் 3-ந்தேதி புதுவை சட்டசபை கூடியது.
இதில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்றார். அதோடு அன்றைய கூட்டம் முடிவடைந்தது. இதற்கிடையே மாநில திட்டக்குழு கவர்னர் கிரண்பேடி தலைமையில் கூடி நடப்பாண்டிற்கான பட்ஜெட் தொகையை இறுதி செய்தது. ரூ.8 ஆயிரத்து 425 கோடி புதுவை அரசின் பட்ஜெட் தொகையாக முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான கோப்புகள் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜூலை 22, 23-ந் தேதிகளில் மீண்டும் சட்டசபை கூடியது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. நீர்வள பாதுகாப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட அரசு தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் புதுவை அரசு அனுப்பிய பட்ஜெட்டிற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது. வருகிற 31-ந்தேதிக்குள் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் சுதந்திர தின விடுமுறைக்கு பின் வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) புதுவை சட்டசபையை கூட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டிய கேள்வி பட்டியலை அனுப்பி வைக்கும்படி சட்டப்பேரவை செயலகம் கடிதமும் அனுப்பி உள்ளது.