அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிப்பு- ஓ.பி.எஸ்.-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிப்பு- ஓ.பி.எஸ்.-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் 29.1.2018 முதல் தலைமைக் கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

கழக உடன்பிறப்புகள், அவ்வாறு பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து, கடந்த 1.3.2018 முதல் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இப்பணியில் முழு கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

கழக உடன்பிறப்புகளின் வேண்டுகோளை ஏற்று, கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் உறுப்பினர் பதிவை புதுப்பித்தலுக்கான காலக்கெடு 30.4.2018 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஆகவே, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி, தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள கழக உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com