சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு

ஜன்னல்களை உடைத்தும், பக்கத்து கட்டிடங்களின் வழியாகவும் 100க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.
நொய்டா
நொய்டா
Published on

உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

விபத்து

நேற்று, நொய்டாவில் செக்டார் 66ல் உள்ள மமுரா பகுதியில் செயல்பட்டு வரும் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் மின்சார வாகனத்தில் மின்கசிவால் திடீரென வெடித்து தீப்பற்றியுள்ளது.

அடுத்த சில நொடிகளில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ வேகமாகப் பரவி தரைத்தளம் முழுவதும் தீ சூழ்ந்தது.

இதனால் அடர்ந்த நச்சுப் புகை, நிமிடங்களில் மேல் தளங்களுக்குப் பரவியது. மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் முடங்கினர்.

அந்த கட்டிடத்தில் பிஜி தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்துள்ளது.

பலர் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஓடினர். அங்கிருந்து பக்கத்து கட்டிடங்களுக்கு தாவி தப்பினர்.

மேலும், அருகில் நடந்து வந்த ஒரு கட்டிடக் கட்டுமான தளத்தில் இருந்தவர்கள், தங்களின் பெரிய ஏணியை இந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு நீட்டிப் பலரைக் காப்பாற்றினர்.

மீட்பு

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஏணிகள் மூலமும் ஜன்னல்களை உடைத்தும், பக்கத்து கட்டிடங்களின் வழியாகவும் 100க்கும் மேற்பட்டோரை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

இருப்பினும் நச்சு புகையால் இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்தக் கட்டிடத்தில் வசித்து வந்த சுமார் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில் அது ஒரு சட்டவிரோத கட்டிடம் என தெரியவந்துள்ளது. கட்டிடத்தை முறையாகப் பராமரிக்காதது மற்றும் விதிகளை மீறி குறுகிய இடத்தில் பிஜி தங்குமிடம் நடத்தியது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் லீசுக்கு எடுத்து அங்கு பிஜி தங்குமிடம் நடத்தி வந்த நபர் ஆகிய இருவர் மீதும் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி எப்ஐஆர் பதியப்பட்டது.

இருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com