மழை காலத்தில் பொது மக்களுக்கு உதவ தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மழை காலத்தில் பொது மக்களுக்கு உதவ தயாராகுங்கள் என தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழை காலத்தில் பொது மக்களுக்கு உதவ தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ‘விழா கொண்டாட்டத்தில்’ இருக்கும் ‘குதிரை பேர’ அரசு எடுப்பதாக தெரியவில்லை. அரைமணி நேரம் மழை பெய்தாலே சென்னையில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதை காணமுடிகிறது.

டெங்கு உற்பத்தி செய்யும் கொசுக்கள் ஒழிப்பு என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள், வீடுகள், மருத்துவமனைகளுக்கு அபராதம் விதித்து, டெங்கு பாதிப்பை திசைத்திருப்பும் பணிகளில் தீவிரம் காட்டும் இந்த அரசு, மழைநீர் வடி கால்வாய்களை சீரமைக்கும் பணிகளிலோ, தூர்வாரும் பணிகளிலோ ஈடுபடவில்லை.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை ‘பேரழிவுக்கு’ உள்ளாக்கிய ‘பெருவெள்ளத்தில்’ இருந்து இந்த அரசு இன்னும் எவ்வித பாடங்களையும் கற்றுக் கொள்ளவில்லை.

‘டிசம்பர் வெள்ளம்’, ‘வர்தா புயல்’ என்று சென்னையை புரட்டிப்போட்ட பேரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கும், உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், மத்திய பா.ஜ.க. அரசிடம் ‘குதிரை பேர’ அரசு கேட்ட எந்த நிதியையும் இதுவரை பெறவில்லை.

சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்ற அமைப்புகளுக்கு இடையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் ஏதும் நடைபெறுவதாகவும் தெரியவில்லை.

சட்டவிரோதமாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு அரசு பணத்தில் ‘அரசியல் விழாக்கள்’ நடத்திக் கொண்டு ‘டெங்கு மரணங்கள்’ குறித்தோ, ‘பருவ மழையை எதிர்கொள்வது’ பற்றியோ எவ்வித கவலையும் இல்லாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு ‘முழு சைஸ்’ கட்அவுட் வைத்துக் கொள்வதில் மட்டும் ஆர்வமாக இருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியது.

“மனித உயிர்களையும், உடைமைகளையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம்”, என்ற அறிவிப்பை துறை அமைச்சர் வெளியிடுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமான பணிகள் ஏதும் நடக்கவில்லை. ஒரு சிறிய மழையிலேயே சென்னை வீதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பார்த்தால், பெருவெள்ளத்தை சந்திப்பதற்கு சென்னை மாநகராட்சியோ, இந்த அரசோ தயாராகவில்லை என்பதை உணர முடிகிறது.


அதேநேரத்தில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க. சென்னை பெரு வெள்ளத்தின் போதும், வர்தா புயல் நேரத்திலும் ஆற்றிய பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். இப்போதும் கூட மாநிலம் முழுவதிலும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வரும் கழக நிர்வாகிகளை ஊக்குவித்து, அந்தப் பணிகளை நானே நேரில் சென்று தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன்.

ஆளுங்கட்சியாக அமர்ந்துள்ள இந்த ‘குதிரை பேர’ அதிமுக அரசு செய்யத் தவறிய மக்கள் பணிகளை எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க. செய்து வருகிறது.

ஆகவே வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ளாமல் இருக்கும் இந்த ‘குதிரை பேர’ அரசு பற்றி கவலைப்படாமல், ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகள் இப்போதே மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகள், திடீர் வெள்ளம் வந்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், தூர்வாராமல் கிடக்கும் கால்வாய்கள், மழைநீர் வடிகால் கால்வாய்கள் போன்றவற்றை அடையாளம் காண வேண்டும் எனவும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் சமூக நலக்கூடங்கள், மாநகராட்சிப் பள்ளிகள் போன்றவற்றில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா, கட்டிடங்களின் உறுதித்தன்மை எப்படியிருக்கிறது போன்றவற்றையும் அறிந்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுதவிர, ஆங்காங்கே உள்ள கழக சட்டமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களும் பேரிடர் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com