நீட் தேர்வில் இருந்து காப்பாற்றுங்கள்: மு.க.ஸ்டாலினை பதாகையுடன் சந்தித்த ஆந்திர மாணவர்

நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அகில இந்திய அளவில் குரல் கொடுத்து வருவதாக முதலமைச்சர் அந்த மாணவனிடம் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆந்திர மாணவர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆந்திர மாணவர்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் செல்லும் வழியில், டி.டி.கே.சாலையில், அவரை சந்தித்த ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் என்.சதிஷ், ‘‘எங்களுக்கு உதவுங்கள்’’ என்ற பதாகையுடன் காத்திருந்தார்.

அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததும் அந்த மாணவர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவை தெரிவித்தார்.

மேலும், தான் ஆந்திர மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது, ஆகையால் உங்கள் பேராதரவு ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதை கேட்டதும் முதல்-அமைச்சர் அந்த மாணவனிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அகில இந்திய அளவில் தான் குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு அந்த மாணவரை கேட்டுக் கொண்டார். அவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்தியா போன்ற ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில், சாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை நிலவும் நாட்டில், நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு தடையாக விளங்குகிறது.

அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அது தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றதோடு, உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது.

அப்படி பெற்ற கல்வி உரிமையை நீட் தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் நீட் தேர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

பிரதமரை கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி முதலமைச்சர் நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவு கடந்த செப்டம்பர் 13-ந் தேதி அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அச்சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காத்திட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com