

சென்னை:
சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது எந்தவித அறிகுறியும் இல்லாமல் நோய் தொற்று பரவுகிறது.
உயிர்கொல்லி நோயான கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை பாதுகாக்க சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனா தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து அவரோடு தொடர்புடைய மற்றவர்களுக்கு எளிதாக பரவி விடுகிறது.
ஒரே குடும்பம், ஒரே தெருவில் பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் எளிதாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு கண்காணிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு பெரியமேடு பகுதியில் (ரிப்பன் மாளிகைக்கு பின் பகுதியில்) ஒரே தெருவில் 8 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் வேப்பேரி கால்நடை மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.