

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ். ஜானகி அம்மாள் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.
ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்.
மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதன்பின், பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் .
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாடகி ஜானகி அம்மா மறைவு இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. பல்வேறு மொழிகளில் அமைந்த அவரது பாடல்கள், தலைமுறை தலைமுறையாகப் பிரபலமாக இருந்தன. அவை ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்தன. அவரது மெல்லிசை, வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத் தொடர்ந்து வசீகரிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த இசை உலகினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.