search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமவெளி பகுதியில் வெப்ப அலை வீசுவதால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    சமவெளி பகுதியில் வெப்ப அலை வீசுவதால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது.
    • தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக சோர்வடைந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அதிகளவில் நீர், மோர், பழங்கள், கரும்பு பால், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பகலில் வெப்பம் நிலவி வந்தாலும், இரவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. இரவில் பேன், ஏர்கூலர் போட்டாலும் வெப்ப காற்றாகவே வருகிறது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


    இதனால் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏற்காட்டுக்கு வந்தனர். காலை நேரத்திலேயே சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் தற்போது பூக்க தொடங்கியுள்ள டேலியா மலர்கள் முன்பு நின்றும் போட்டோ எடுத்து கொண்டனர். மலைப்பாதையில் கடுமையான வறட்சி நிலவினாலும் ஏற்காடு மலை பகுதியில் களை கட்டும் சீசனை அனுபவிக்க கூட்டம் அலைமோதியது. தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் சீசன் இன்னும் களை கட்டும் எனவே கோடை மழையை எதிர்நோக்கி வியாபாரிகள் உள்ளனர்.

    Next Story
    ×