search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு 140 ஆஸ்பத்திரிகள் தயார்
    X

    சென்னையில் "ஹீட் ஸ்ட்ரோக்" சிகிச்சைக்கு 140 ஆஸ்பத்திரிகள் தயார்

    • வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும்.
    • கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம்.

    சென்னை:

    சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிகளை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும். சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    நகரில் 188 இடங்களில் கவுண்டர் அமைத்து வாய் வழி ரீ-ஹைட்ரஜன் (ஓ.ஆர்.எஸ்.) கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைநோய் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம். தலையில் தொப்பி அல்லது தலைப்பாகை அணிந்து வெளியில் செல்ல வேண்டும்.

    வெயிலில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தர்பூசணி, இளநீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×