search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாரதிய ஜனதாவை வீழ்த்தி அகிலேஷ் யாதவ் சாதிப்பாரா?
    X

    பாரதிய ஜனதாவை வீழ்த்தி அகிலேஷ் யாதவ் சாதிப்பாரா?

    • 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.
    • பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    லக்னோ:

    பாரதிய ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வரும் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ்யாதவ் பாராளுமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்கியது அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. அங்குள்ள கண்ணூஜ் தொகுதியில் அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    முதலில் இத்தொகுதியில் அகிலேஷ் யாதவ்வின் சகோதரி மகன் தேஜ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது மாமாவுக்காக ( அகிலேஷ்யாதவ்) தொகுதியை விட்டு கொடுத்தார். இதனால் கண்ணூஜ் நட்சத்திர தொகுதியாக மாறியது. இத்தொகுதியில் அவர் ஏற்கனவே 2000, 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். கண்ணூஜ் தொகுதியை பொறுத்த

    வரை அகிலேஷ் யாதவின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

    இத்தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஒருமுறையும், அகிலேஷ் 3 முறையும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடி உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரத் பதக் உள்ளார். இம்முறையும் இவர் மீண்டும் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் இவரை டிம்பிள் யாதவ் 19,907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு பழி வாங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிம்பிள் யாதவைவிட 12,353 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று சுப்ரத் பதக் வெற்றி பெற்றார்.

    இம்முறை டிம்பிள் யாதவ் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவரது இடத்தை நிரப்பும் வகையில் அவரது கணவர் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த முறை சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி சார்பில் அகிலேஷ் நிற்பதால் கண்டிப்பாக எங்களுக்கு தான் வெற்றி என அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயம் பாரதிய ஜனதாவை பொறுத்தவரை இது ஒரு கவுரவ பிரச்சனை. எப்படியும் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவை வீழ்த்துவோம் என பாரதிய ஜனதாவினர் கூறி உள்ளனர். தனது ஆஸ்தான தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது போன்ற சூழ்நிலை கண்ணூஜ் தொகுதியில் நிலவுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இத்தொகுதியில் சுமார் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சம் பேர் முஸ்லீம்கள், யாதவர்கள், பிராமணர்கள் தலா 2.5 லட்சம் பேர் உள்ளனர். கண்ணூஜ்ஜில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் தலித் வாக்குகள் மிக முக்கியமாக உள்ளது. தலித்துகள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை தவிர ராஜபுத்திரர்கள், வைசியர்கள், மற்றும் குர்மி சமூகத்தினர் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர்.

    இத்தொகுதியில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தனது கட்சி சார்பில் இம்ரான் பின் ஜாபரை நிறுத்தி உள்ளார்.

    இவர் தலித் ஓட்டுகள் மட்டுமல்லாது முஸ்லீம் ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. வாக்காளர்கள் மத்தியில் போதிய அளவு வேலை வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஏராளமானவர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இது இத்தேர்தலில் பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. கண்ணூஜ் தொகுதியில் இம்முறை பாரதீயஜனதா- சமாஜ்வாடி, கட்சிகளுடன் ஓட்டு வங்கி வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்த வரை இத்தொகுதியில் இதுவரை வென்றதாக வரலாறு இல்லை. இதனால் பதக்-யாதவ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி 4-வது முறையாக அகிலேஷ் யாதவ் சாதிப்பாரா? அல்லது பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    Next Story
    ×