search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு கணவர் செய்ய வேண்டிய பணிவிடைகள்
    X
    கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு கணவர் செய்ய வேண்டிய பணிவிடைகள்

    கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு கணவர் செய்ய வேண்டிய பணிவிடைகள்

    கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் இதமான மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பது தாய்சேய் நலத்திற்கு இன்றியமையாதது. ஆகக் கணவன்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து சண்டை வராமல் தவிர்க்க வேண்டும்.
    கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. சில சமயம் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி கொள்வர். சில வேளைகளில் கடும் கோபம் கொள்வர். ஏன் காரணமே இல்லாமல் விரக்தி அடைவர். இதை ஆங்கிலத்தில் ‘மூட் ஸ்விங்’ என்பர். இந்த மனநிலை மாற்றங்களுக்குச் சுரப்பிகளின் ஏற்ற இறக்கங்களே காரணம். ஆக ஒரு கணவனுக்குக் கர்ப்பவதியாக உள்ள தன் மனைவியின் மனநிலை மாற்றம் குறித்த புரிதல் மிக மிக அவசியம். உங்கள் கரிசனமும், அன்பும் உங்களது மனைவியின் மனதை இதமாக்கும் கருவிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் மனைவி மருத்துவ ஆலோசனை பெற ஏற்ற பெண் மருத்துவரைத் தேர்வு செய்யுங்கள். கூடுதலாக வீட்டின் அருகாமைப் பகுதியில் உள்ள தரமான மருத்துவமனையாக அது இருக்கும் பட்சத்தில் இன்னும் நல்லது. உங்கள் மனைவியின் பிரசவ நேரத்தில் இது சௌகரியமான சூழலை ஏற்படுத்தும். கணவன்மார்களே உங்கள் கர்ப்பிணி மனைவிகளுக்குச் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகள் அவசியம். அதனால் சரியான நேரக் குறிப்பெடுத்து அவர்களை அன்போடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உங்களின் மிக முக்கிய கடமையாகும்.

    உங்கள் கர்ப்பிணி மனைவிகளால் எல்லா வீட்டு வேலைகளையும் தனியாகச் செய்ய இயலாது. இந்த சமயத்தில் அவர்கள் நிச்சயம் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் உரிமையோடு உதவி கேட்கும் நபர்களில் நீங்கள் முதலிடத்தில் உள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் சமையல் செய்யும் போது சில பொருட்களின் நெடி அவர்களுக்குப் பிடிக்காமல் குமட்டல் உணர்வைப் பெற்றுச் சிரமப்படுவார்கள். இந்த சமயத்தில் நீங்கள் சமையலில் சற்று உதவிகரமாக இருந்து உங்கள் மனைவிமார்களுக்கு கை கொடுக்கலாம். அதற்கென்று அதீத அன்பில் உங்கள் மனைவியை நாற்காலியில் அமர்த்தி வைத்து விடாதீர்கள். அவர்களும் வீட்டு வேலை செய்ய வேண்டும். அது தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    கர்ப்பிணிப் பெண்களுக்குச் சரியான வழிகாட்டுதலும், உந்துதலும் குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டும். அவர்கள் தேவையான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே சுகப் பிரசவம் நடைபெறும். அதற்காகத் தினம் உங்கள் மனைவியை மாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம். அதே மாதிரி காலை நேரத்தில் உரிய யோகா ஆசிரியரிடம் கற்று அறிந்த பிரசவ கால பயிற்சிகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்ய உங்கள் அன்பு மனைவியை ஊக்கப்படுத்தலாம்.

    சராசரியாகக் கணவன் மனைவிகளால் தினம் ஒரு சண்டையாவது போடாமல் இருக்க முடியாது. ஆனால் கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் இதமான மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பது தாய்சேய் நலத்திற்கு இன்றியமையாதது. ஆகக் கணவன்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து சண்டை வராமல் தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் அவசியம். குறிப்புக்காகப் பிரசவ நேரச் சிக்கல் வராமல் இருக்க இரும்புச் சத்து அதிகம் தேவை. அதனால் தினம் வேலை முடிந்து நீங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது காய்கனிகள், கீரைகள், பருப்பு வகைகள் என்று அட்டவணைப் போட்டு உங்கள் மனைவிக்கு தவறாமல் வாங்கி வாருங்கள்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீர் திடீரென எதாவது ஆசை வரும். திடீரென புளிப்பான மாங்காய் வேண்டும் என்பார்கள். உடனே கோவிலுக்குப் போக வேண்டும் என்று கெஞ்சுவார்கள். எப்போதோ வந்த திரைப்படத்தை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும் போல உள்ளது என்பார்கள். தூரத்துக் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வீட்டிற்குப் போக வேண்டும் என்பார்கள். என்ன கணவன்மார்களே! கேட்கவே பயமாக உள்ளதா? ஆமாம் இது நிச்சயம் உங்கள் பொறுமைக்கான பரீட்சைக் காலம்தான். இயன்றவரை அவர்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

    ஒரு கணவனாக உங்கள் அருகாமையை உங்கள் கர்ப்பிணி மனைவி அதிகம் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு அவசியமாகத் தேவைப்படும். உங்கள் அன்பான பார்வைகளும்,தலை கோதல்களும், சின்ன தழுவல்களும் உங்கள் மனைவியின் மனதை விவரிக்க முடியாக அளவு பரவசப்படுத்தும் என்பது உண்மை. கூடுதலாக உங்கள் குழந்தை கருவறையில் செய்யும் குறும்புகள் அதிகம். உதாரணமாக உதைப்பது, இடம் மாறுவது என்று அடுக்கலாம். அதைப் பற்றி எல்லாம் உங்கள் மனைவி உங்களிடம் பகிர்வதோடு நிறுத்தாமல் அந்த ஆனந்தத்தை உங்களையும் அடையச் செய்வர். ஒரு அப்பாக நீங்கள் அந்த சுகங்களை அனுபவிக்கத் தயாராக இருங்கள்.

    உங்கள் மனைவிமார்கள் நிறைமாதத்தைத் தொட்டவுடன் அவர்களுக்குத் தானாகவே பிரசவ அச்சம் வந்துவிடும். ஒரு நல்ல கணவனாக நீங்கள் நிறைய நம்பிக்கைகளை வழங்க வேண்டும். நிச்சயம் உனக்குச் சுகப்பிரசவம் நடக்கும். எப்போதும் நான் உனக்குத் துணை இருப்பேன் என்பன போன்ற நேர்மறை வார்த்தைகளை உங்கள் மனைவியின் மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த விசயம் உங்கள் மனைவிக்கு மட்டும் உங்கள் குழந்தைக்கும் நன்மைப் பயக்கும். இது அப்பாக உங்கள் கடமையும் கூட!
    Next Story
    ×