search icon
என் மலர்tooltip icon

    கார்

    அடுத்த ஆண்டு இரண்டு.. இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகும் வால்வோ எலெக்ட்ரிக் கார்கள்
    X

    அடுத்த ஆண்டு இரண்டு.. இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகும் வால்வோ எலெக்ட்ரிக் கார்கள்

    • எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அசெம்பில் செய்யும் வால்வோ.
    • 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

    வால்வோ நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்ட வால்வோ EX90 மற்றும் EX30 EV மாடல்கள் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என வால்வோ கார்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மற்றும் C40 ரிசார்ஜ் என இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வால்வோ புது அறிவிப்பின் படி இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு இருமடங்கு அதிகரிக்க இருக்கிறது.


    புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படுவதோடு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அசெம்பில் செய்வதற்கான பணிகளிலும் வால்வோ ஈடுபட்டு வருவதாக ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    விற்பனையை பொருத்தவரை வால்வோ இந்தியா நிறுவனம் 2023 ஆண்டில் 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 28 சதவீதம் ஆகும். இதில் 519 யூனிட்கள் XC40 ரிசார்ஜ், 180 யூனிட்கள் C40 ரிசார்ஜ் அடங்கும். இந்த ஆண்டு தனது எலெக்ட்ரிக் வாகன விற்பனை 33 சதவீதம் ஆக அதிகரிக்கும் என வால்வோ இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


    எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற வகையில், வால்வோ EX90 மாடல் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் EV SPA2 ஆர்கிடெக்ச்சரில் உருவான வால்வோ-வின் முதல் மாடல் என்ற பெருமையை பெற்றது.

    இந்த காரின் டாப் எண்ட் மாடலில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 517 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.

    வால்வோ EX30 மாடல் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். இதில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 442 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 427 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    Next Story
    ×