செய்திகள்
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை

வேலூர் தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் பெண் வாக்காளர் ஓட்டுகள்

Published On 2019-08-07 06:05 GMT   |   Update On 2019-08-07 06:05 GMT
வேலூர் தொகுதியில் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 18,591 ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த் உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்கு பதிவு மின்னணு எந்திரங்கள் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 350 போலீசார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் என மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலையொட்டி 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற இத்தேர்தலில் மொத்தம் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீத வாக்குப்பதிவாகும். அதிகபட்சமாக பெண் வாக்காளர்கள் 5,21,452 பேரும், ஆண்கள் 5,02,861 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேரும் வாக்களித்துள்ளனர். ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 18,591 ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.



சட்டசபை தொகுதி வாரியாக வேலூர் தொகுதியில் மொத்தமுள்ள 2,45,055 வாக்காளர்களில் 1,63,337 பேரும் (66.65 சதவீதம்), அணைக்கட்டு தொகுதியில் 2,39,045 வாக்காளர்களில் 1,78,723 பேரும் (74.77 சதவீதம்), கே.வி.குப்பம் தொகுதியில் 2,14,826 வாக்காளர்களில் 1,62,413 பேரும் (75.60 சதவீதம்), குடியாத்தம் தொகுதியில் 2,71,855 வாக்காளர்களில் 1,87,743 பேரும் (69.06 சதவீதம்), வாணியம்பாடி தொகுதியில் 2,36,911 வாக்காளர்களில் 1,73,545 பேரும் (73.25 சதவீதம்), ஆம்பூர் தொகுதியில் 2,24,863 வாக்காளர்களில் 1,58,591 பேரும் (70.53 சதவீதம்) வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வாக்குகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவரும்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மொத்த 21 சுற்றுகள் எண்ணப்படுகிறது.


Tags:    

Similar News