இந்தியா

தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்- பிரதமர் மோடி

Published On 2024-04-29 06:20 GMT   |   Update On 2024-04-29 06:20 GMT
  • நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது.
  • இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலம் வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை பிரதமர் மோடி வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுவரை நான் நாடு முழுவதும் 70 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தி பிரசாரம் செய்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் என் மீது அளவு கடந்த அன்பையும் ஆதரவையும், பாசத்தையும் காட்டியதை காண முடிந்தது. மக்களின் இந்த அபரிமிதமான அன்பை பார்க்கும் போது 400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற எங்களது இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால் அது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து புரிந்து இருக்கிறார்கள். தற்போது 2 கட்ட தேர்தல் முடிந்து இருக்கிறது. இந்த 2 கட்டங்களிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தோல்வியை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதற்கு முக்கிய காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் இன மக்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டங்களை திருத்தி விடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் நான் முதல்-மந்திரி ஆனதில் இருந்து தற்போது வரை என்னென்ன செய்து வருகிறேன் என்று சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது. மக்கள் இன்னமும் மாற்றங்கள் வேண்டும் என்கிறார்கள். அதை நிச்சயம் செய்வோம். பாரதிய ஜனதா தோற்கும் என்று காங்கிரசின் இளவரசர் சொல்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நழுவி சென்று விட்டனர். அப்போதே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர். இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது. நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.


தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தென் இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் அபரிமிதமான ஆதரவை கொடுத்தனர். அன்பு மழையை பொழிந்தனர். தென் இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஆட்சியைதான் மக்கள் பார்த்து வருகிறார்கள். அந்த கட்சிகளின் ஆட்சிகள் அரசை தவறாக வழிநடத்துவதையும், பிரிவினைவாத செயல்களை செய்வதையும் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதையும் தான் பார்த்து வருகிறார்கள். மொத்தத்தில் தென் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டு இருப்பதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் மீதும், மாநில கட்சிகள் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தென் மாநில மக்கள் மத்தியில் பா.ஜ.க. தலைமையில் நடைபெறும் சிறப்பான ஆட்சியையும் பார்க்கிறார்கள்.

மக்கள் நல திட்டங்களில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள முக்கிய திருத்தங்களையும் தென் மாநில மக்கள் பார்க்கிறார்கள். நாங்கள் கொண்டு வந்துள்ள முக்கிய நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பாரதிய ஜனதாவிடம் அவர்கள் நம்பிக்கை ஒளியை பார்க்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவை மக்கள் நம்ப தகுந்த மாற்று சக்தியாக ஏற்க தொடங்கி இருக்கிறார்கள். தென் இந்தியாவில் பாரதிய ஜனதாதான் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக கடந்த தேர்தலில் திகழ்ந்தது. இந்த தடவை தென் இந்தியாவில் அதிக வெற்றி பெறும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தமிழகம் உள்பட தென் இந்தியாவில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறும். இந்த தடவை தென் இந்திய தேர்தல் முடிவுகள் பல பாரம்பரிய கதைகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும். தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரிக்கும். தேர்தல் முடிவு வெளியாகும் போது அதை நீங்கள் பார்ப்பீர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

Similar News