இந்தியா

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான விவாதம்: மோடி, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த முன்னாள் நீதிபதிகள்

Published On 2024-05-09 11:25 GMT   |   Update On 2024-05-09 11:25 GMT
  • பிரதமர் மோடி, இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகள் எழுப்பியுள்ளார்.
  • மல்லிகார்ஜுன கார்கே, அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தோதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அக்கடிதத்தில், "தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும் காங்கிரசும் நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படை தொடர்பான பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியுடன் பொது விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் என்ற முறையில், நாங்கள் இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே கேட்டோம், ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் எதையும் கேட்கவில்லை. ஆகவே மக்கள் உண்மையை தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்கு இந்த விவாதம் தேவைப்படுகிறது.

ஆகவே முக்கிய தேர்தல் பிரச்சினைகள் குறித்த இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு மோடியையும் ராகுல் காந்தியையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News