search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் தென்கிழக்கு ஆசியா தலைவன் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொல்லப்பட்டான்
    X

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் தென்கிழக்கு ஆசியா தலைவன் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொல்லப்பட்டான்

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் தென்கிழக்கு ஆசியா கண்டத்தின் தலைவன் உள்பட இருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் மாராவி நகரில் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    மணிலா:

    பிலிப்பன்ஸ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாத குழுவினர் இயங்கி வருகின்றனர். புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து பரவலாக வாழும் இந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்த ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளை கடத்தி செல்லும் அபு சய்யாப் தீவிரவாதிகள், பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு பலரை விடுவிக்கின்றனர்.

    பிணைத் தொகை கிடைக்காத நிலையில், பிடித்து சென்றவர்களின் தலையை வெட்டி, ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். இவர்களை வேட்டையாடி அழிக்குமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நாடு முழுவதும் அபு சய்யாப் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்டானோ தீவுக்கூட்டத்தில் இஸ்லாமிய இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மாராவி நகரில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்பகுதியை தலைமையிடமாக தக்க வைத்துக் கொண்டு அபு சய்யாப் மற்றும் மாவ்ட்டே தீவிரவாத குழுவினர் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் அரசுப் படையினரும் போலீசாரும் கடந்த மே மாதம் 23-ம் தேதி மாராவி நகரை சுற்றி வளைத்தனர்.

    அபு சய்யாப் தீவிரவாதிகளை பதுங்கும் இடங்களில் இருந்து வெளியேற்ற கடுமையான தாக்குதலில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. 813 தீவிரவாதிகள், 162 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாராவி நகரில் பதுங்கி இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் தென்கிழக்கு ஆசிய தலைவனாக தன்னை அறிவித்துகொண்ட இஸ்னிலான் ஹபிலான் மற்றும் ஒமர்கயாம் மவ்ட்டே ஆகியோர் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸ் நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×