search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியமைக்க யாருக்கு ஆதரவு? நியூசிலாந்து கிங்மேக்கர் கட்சி திங்கட்கிழமை முக்கிய ஆலோசனை
    X

    ஆட்சியமைக்க யாருக்கு ஆதரவு? நியூசிலாந்து கிங்மேக்கர் கட்சி திங்கட்கிழமை முக்கிய ஆலோசனை

    நியூசிலாந்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், கிங்மேக்கராக திகழும் நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி திங்கட்கிழமை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
    வெலிங்டன்:

    நியூசிலாந்தில் கடந்த மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பழமைவாத தேசிய கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேசிய கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் பில் இங்கிலீஷ் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். தொழிலாளர் கட்சி சார்பில் ஜெசிந்தா ஆண்டர்ன் நிறுத்தப்பட்டிருந்தார். இதுதவிர நியூசிலாந்து பர்ஸ்ட், பசுமைக் கட்சி, ஏசிடி நியூசிலாந்து உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் தேசிய கட்சிக்கு 56 இடங்களும், தொழிலாளர் கட்சிக்கு 46 இடங்களும் கிடைத்தன.

    சிறிய கட்சியான நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி 9 இடங்களிலும், பசுமைக்கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 61 உறுப்பினர் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, தொங்கு பாராளுமன்றம் அமைவது உறுதியானது.

    எனவே, கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தேசிய கட்சியும், தொழிலாளர் கட்சியும் இறங்கி உள்ளன. குறிப்பாக, 2008 முதல் ஆட்சியில் இருக்கும் தேசிய கட்சிக்கே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கட்சி நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சியின் ஆதரவை பெற்றால் மெஜாரிட்டி பெறும். தொழிலாளர் கட்சியோ, நியூசிலாந்து பர்ஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியின் ஆதரவை பெற வேண்டி உள்ளது.

    எனவே, தொங்கு பாராளுமன்றத்தில் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க முயற்சிக்கும் இரண்டு கட்சிகளுடனும் கடந்த ஒரு வார காலமாக ஆலோசனை நடத்தியது.

    இந்நிலையில், நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. நிர்வாகிகளிடம் கருத்தும் கேட்கப்படுகிறது. அதன்பின்னர், கட்சியின் நிலைப்பாடு குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×