search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் டிரைவர்களால் விபத்துக்கள் நிச்சயம் குறையும்: சவூதி உள்துறை அமைச்சர் தகவல்
    X

    பெண் டிரைவர்களால் விபத்துக்கள் நிச்சயம் குறையும்: சவூதி உள்துறை அமைச்சர் தகவல்

    பெண் டிரைவர்களால் சாலைகளில் நடைபெறும் விபத்துக்கள் பெருமளவு குறையும் என சவூதி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    ரியாத்:

    பழமைவாத நடைமுறைகளை கொண்டுள்ள சவூதி அரேபியா மன்னராட்சியின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை கொண்டுள்ளது.

    இந்நாட்டில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. கார் ஓட்டுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, மைதானத்தில் சில விளையாட்டுக்களை நேரில் பார்ப்பது என பல உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.

    சமீப காலமாக சவூதி அரசு தனது நிலைப்பாட்டில் சற்றே மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாட்டின் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும், சர்வதேச பெண்கள் தினம் சமீபத்தில் அரண்மனையில் கொண்டாடப்பட்டது.

    இதற்கிடையே, சவூதி நாட்டில் உள்ள பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதியளிக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளார். ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவு அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சவூதியில் தினமும் சாலை விபத்துக்களில் 20 பேர் பலியாகி வருகின்றனர். சாலைகளில் பாதுகாப்பாக செல்வதற்கான நிலை அங்கு மோசமடைந்துள்ளது. இதனால் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சவூதி நாட்டின் உள்துறை அமைச்சர், பெண் டிரைவர்களால் விபத்துக்கள் பெருமளவு குறையும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் டுவிட்டரில் அவர் கூறுகையில், சாலைகளில் பாதுகாப்பாக சென்று வருவதற்கு கார் ஓட்டும் பெண் டிரைவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். அவர்களால் சாலை விபத்துக்கள் பெருமளவு குறையும். இதனால் ஏற்படும் மனித உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் நிச்சயம் குறைந்து விடும் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×