search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக் நாட்டில் பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
    X

    ஈராக் நாட்டில் பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

    ஈராக் நாட்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் குண்டு வெடித்ததில் துணை ராணுவத்தினர் 12 பேர் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் குண்டு வெடித்ததில் துணை ராணுவத்தினர் 12 பேர் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

    ஈராக் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரம், கடந்த ஜூலை மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக ராணுவத்தினால் மீட்கப்பட்டது.

    இதன் மூலம் அங்கு 9 மாதங்களாக நடந்து வந்த கடும் சண்டை ஓய்ந்தது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டது.

    இந்த மொசூல் நகரம் அருகே பாதுஷ், தால் அபார் ஆகிய இரு சிறிய நகரங்களுக்கு மத்தியில் மாகார்ன் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள பள்ளிக்கூட கட்டிடம், ஈராக் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிற சன்னி பிரிவை சேர்ந்த ‘டிரைபல் மொபிலிசேசன்’ என்னும் துணை ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் துணை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூட கட்டிடத்தில் நேற்று காலை பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி அதிர்ந்தது. பெரும் புகை மண்டலமும் உருவானது. கட்டிடத்தின் சில அறைகள் இடிந்து தரை மட்டமாகின.

    இந்த குண்டுவெடிப்பில் சிக்கி துணை ராணுவத்தினர் 12 பேர் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதை ராணுவ கேப்டன் தர்காம் அல் மாவ்லா உறுதி செய்துள்ளார். இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே கிர்குக் மாகாணத்தில், அல் ரியாத் நகரின் புறநகர் பகுதியில் வான்தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலின்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஓய்வு இல்லம் குறி வைத்து தகர்க்கப்பட்டது. அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்கள் 2 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதை அங்குள்ள ‘பாப்புலர் மொபிலிசேசன்’ படையின் உயர் அதிகாரி ஜப்பார் அல் மாமவுரி கூறியதாக அல் சுமரியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இவர்களையும் சேர்த்து இந்த மாதத்தில் கிர்குக்கில் நடந்த வான்தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் 3 தலைவர்கள் பலியாகி விட்டதாக ஜப்பார் அல் மாமவுரி தகவலை மேற்கோள் காட்டி அல்சுமரியா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×