search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்ச்சுகல்: காட்டுத்தீயில் சிக்கிய வாகனங்கள் - பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு
    X

    போர்ச்சுகல்: காட்டுத்தீயில் சிக்கிய வாகனங்கள் - பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

    போர்ச்சுகல் நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பலியானோர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
    லிஸ்பன்:

    ஐரோப்பா கண்டத்தின் தென்பகுதியில் உள்ள போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கு வனப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென்று காட்டுத்தீ உண்டானது.

    மளமளவென பரவிய தீ காட்டில் இருந்த மரங்களை பதம் பார்த்ததுடன் காட்டில் ஓரமாக செல்லும் சாலையோரம் இருந்த மரங்களையும் பற்றியது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்களில் கடந்து சென்றவர்கள் எரிந்த நிலையில் சாலையில் விழுந்த மரங்களால் முன்பக்கமோ, பின்பக்கமோ போக முடியாமல் சாலையின் நடுவில் வசமாக சிக்கிக் கொண்டனர்.



    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தவாறு முன்னேறி சென்று கொண்டிருந்த நிலையில் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் வந்த நாற்பதுக்கும் அதிகமானவர்கள்  உயிரிழந்ததாகவும், பலர் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிறன்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் சிறு விமானங்களின் உதவியுடன் ஆயிரத்துக்கும் அதிகமான மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 



    எனினும், அந்தப் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக தற்போது பலத்த காற்று வீசுவதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்து அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.



    இதனால், அவ்வழியாக பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை இன்று 64 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×