search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை நடத்தி அதிரடி - கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்
    X

    வடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை நடத்தி அதிரடி - கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்

    வடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை ஒன்றை அதிரடியாக நடத்தி உள்ளது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்.
    சியோல்:

    வடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை ஒன்றை அதிரடியாக நடத்தி உள்ளது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்.

    வடகொரியா 5 முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது. இதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், ஐ.நா. சபையும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    ஆனால் வடகொரியா அதற்கெல்லாம் அடிபணியாமல், தனது அணு ஆயுத திட்டங்கள் தொடரும் என்று கூறிவிட்டது. தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த வாரம் கூட வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற ஒரு ஏவுகணையை சோதித்தது நினைவுகூரத்தக்கது.

    இதன் காரணமாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே தீராத பனிப்போர் நிலவி வருகிறது.



    இந்த நிலையில் நேற்று அதிரடியாக விமான எதிர்ப்பு ஆயுத சோதனை ஒன்றை வடகொரியா நடத்தியது. இந்த சோதனையை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டு வழிநடத்தினார்.

    இந்த ஆயுதத்தை பெருமளவில் தயாரித்து, அதை நாடு முழுவதும் நிறுவுவதற்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக வடகொரிய அரசின் கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், “வடகொரியாவின் தேசிய ராணுவ அறிவியல் அகாடமி ஏற்பாட்டில் புதிய வகை விமான எதிர்ப்பு ஆயுத சோதனை நடைபெற்றது. இதை கிம் ஜாங் அன் பார்வையிட்டார். இந்த ஆயுதம், அதன் செயல்பாட்டுத்திறன், முழுமையாக சரிபார்க்கப்பட்டது. இந்த ஆயுதம், வான்வழி தாக்குதலை நடத்த எண்ணுகிற எதிரியின் கெட்ட கனவை அழித்து விடும் ”என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமான எதிர்ப்பு ஆயுத சோதனையின்போது வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் அவரது ஏவுகணை திட்டங்களை நிறைவேற்றி வருகிற விஞ்ஞானிகள் கிம் ஜாங் சிக், ஜாங் சாங் ஹா, விமானப்படை முன்னாள் தளபதி ரி பியாங் சோல் ஆகியோரும் உடன் இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள், அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஐ.சி.பி.எம். என்று அழைக்கப்படுகிற கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து வருகிற ஏவுகணைகளை இடைமறித்து நிறுத்துகிற ஆயுத சோதனையை நடத்துவதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின், ஏவுகணை ராணுவ முகமை தயாராகி வருகிறது. இந்த சோதனையை நாளை (செவ்வாய்க்கிழமை), ரீகன் சோதனை தளத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்த சோதனை வெற்றி அடைந்தால், எதிரியின் கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமைமிக்க ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து நிறுத்தி விட முடியும் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×