search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே டிரைவர் இல்லாமல் தறிகெட்டு ஓடிய லாரி
    X

    திண்டுக்கல் அருகே டிரைவர் இல்லாமல் தறிகெட்டு ஓடிய லாரி

    திண்டுக்கல் அருகே டிரைவர் இல்லாமல் தறி கெட்டு ஓடிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சின்னாளப்பட்டி:

    மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சரக்கு லாரி ஒன்று இன்று காலை வந்து கொண்டு இருந்தது. சின்னாளப்பட்டியை அடுத்துள்ள ஏ.வெள்ளோடு பிரிவில் லாரி வந்த போது இணைப்புச்சாலையை பிரிக்கும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டு மீது மோதியது.

    அப்போது ஸ்டியரிங் லாக் ஆகி கொண்டது. இதனால் லாரி டிரைவர் கீழே குதித்தார். ஆனால் லாரியில் டிரைவர் இல்லாத நிலையில் பின்னால் சிறிது தூரம் சென்றது. மேலும் 4 வழிச்சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனை கடந்தும் தாவியது. இதைப்பார்த்ததும் மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் இருபுறமும் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

    பின்னால் சென்ற லாரி மீண்டும் அதே போல் முன்னாள் வந்து வட்டமடித்து 5 நிமிடம் சென்றது. தறி கெட்டு லாரி ஓடியதால் அதன் முன் பக்கம் சேதமடைந்தது. அப்போது டிரைவர் லாரியில் ஏற முயன்றும் முடியவில்லை. மேலும் சக்கரத்தின் கீழே கற்களை வைத்தும் லாரி அதன் மீறி ஏறி சென்றது.

    பின்னர் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

    இது குறித்து அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிருஷ்ணகிரியில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியில் சரக்குகள் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 35) என்ற வாலிபரை போலீசார் சோதித்ததில் அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் பரபரப்பை ஏற்படுத்திய லாரியையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
    Next Story
    ×