search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழி கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
    X

    கோழி கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

    குழித்துறையில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த டெம்போவின் சக்கரம் கழன்று ஓடியதால், பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    களியக்காவிளை:

    கேரளாவில் உள்ள இறைச்சி கழிவுகள் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் கோழிக்கழிவுகள் களியக்காவிளை, குழித்துறை ஆகிய பகுதிகளில் சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதன்காரணமாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை டெம்போ ஒன்று கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு கேரளாவில் இருந்து களியக்காவிளை வழியாக தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. குழித்துறை அருகே வந்தபோது அந்த டெம்போவின் பின் பக்க சக்கரம் ஒன்று கழன்று ரோட்டில் ஓடியது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ ரோட்டில் தாறுமாறாக ஓடியது. இதைக்கண்ட அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது தூரம் சென்றதும் டெம்போ நடு ரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டெம்போவை  பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குழித்துறை வாவுபலி மைதானத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினர். கோழிகழிவுகளை ஏற்றி வந்த டெம்போவிற்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.
    Next Story
    ×