search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் மேலும் 100 போலி டாக்டர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை
    X

    திருவண்ணாமலையில் மேலும் 100 போலி டாக்டர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 100 போலி டாக்டர்களை பிடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததாக செங்கம், போளூர், வேட்டவலம் பகுதியில் 7 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    மேலும் 12 ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகங்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சோதனையை அறிந்த 5 போலி டாக்டர்கள் தப்பியோடி விட்டனர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் மாவட்டம் முழுவதும் மேலும் 100 போலி டாக்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்ய மருத்து குழுவினரும், போலீசாரும் களமிறங்கியுள்ளனர்.

    குடும்பநல இணை இயக்குனர் நவநீத தனலட்சுமி, மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் பாண்டியன், சென்னையிலிருந்து வந்த மருத்துவ குழு என 3 குழுவினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் கந்தசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 12 மருந்துக்கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். விரைவில் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள 320 தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளியில் மாணவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    டெங்கு மற்றும் இதர காய்ச்சல் தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மருந்தகங்களும் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்தவிதமான மருந்துகளையும் குறிப்பாக ‘செட்’ மாத்திரைகள் மற்றும் பேராசிட்மால் போன்ற மருந்துகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்க கூடாது.

    இவ்வாறு நேரடியாக மருந்துகள் விற்பனை செய்வது குறித்து மருந்துகள் கட்டுப்பாட்டு துறை மூலமாகவோ அல்லது சாதாரண பொது மக்கள் எவரேனையும் வைத்தோ திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது தவறுகள் கண்டறிப்பட்டால் சம்பந்தப்பட்ட மருந்துக்கடைகளுக்கு நிரந்தரமாக ‘சீல்’ வைப்பது, மருந்துக்கடை உரிமம் ரத்து செய்வது உள்ளிட்ட மிக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இது சம்பந்தமாக 630 மருந்தகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×